FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு இபிஎஸ் அறிக்கை...

16 அக்டோபர் 2026, 10:46 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம் அதிமுக என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

”தீய சக்தியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும்; அண்ணாவின் லட்சியங்களை நிலைநாட்டவும்; கோடானு கோடி மக்களின் பேராதரவோடு, 1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் நாள் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கினார் நம் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர்!

1977-ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக, எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் என எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி, "அமைதி! வளம்! வளர்ச்சி!" என்ற தாரக மந்திரத்தின்படி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்கள்.

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுகவைச் சூழ்ந்த சோதனைகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் மத்தியில், உங்களின் பேராதரவோடும், தமிழக மக்களின் நம்பிக்கையோடும், முதலமைச்சராகப் பதவியேற்று, ஜெயலலிதாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்தும் பெரும் வாய்ப்பைப் பெற்றேன்.

அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்ற ஏழை, எளிய மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் காட்டினோம்!

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில், அசாதாரணமான அரசியல் சூழலிலும், கவர்ச்சி அரசியலின் மாயத் தோற்றங்கள் மேலோங்கிய நிலையிலும், அவற்றையெல்லாம் கடந்து, அதிமுக கூட்டணி சுமார் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றதுடன், 47 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்து, தனது அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது!

கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழியைப் போன்றது! அது எந்த நேரத்திலும் உடைந்து சிதறிவிடும்! ஆனால், கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட அதிமுக, காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம்!

கவர்ச்சி அரசியலால் மக்களை ஏமாற்றி, குதிரை பேர அரசியலின் துணையோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள், ஜனநாயகத்தின் மாண்புகளைப் படுகுழியில் தள்ளியதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் என, சாதாரண மக்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதலமைச்சரோ, வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வினோதத்திலும் வினோதம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டுகிறது! ஏழை, எளிய மக்களும், நடுத்தரக் குடும்பங்களும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே திண்டாடுகிறார்கள்! தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக காவு கொடுக்கப்படுகின்றன!

ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்த அரசாக இந்த அரசு மாறி இருக்கிறது!

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைவிட, அதிமுகவை எவ்வாறு பலவீனப்படுத்தலாம்; அதன் சட்டமன்ற உறுப்பினர்களை எவ்வாறு குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கலாம்; அதிமுகவை எவ்வாறு விழுங்கிவிடலாம் என்பதிலேயே ஆட்சியாளர்கள் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்! அவர்களுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!

அதிமுக அதிகாரத்திற்காக ஒன்றுகூடிய கூட்டமல்ல! அது லட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம்!

இலட்சிய உறுதிமிக்க தொண்டர்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக, உங்களின் பேரன்பையும் பெருநம்பிக்கையையும் பெற்றுத்தான், இன்று இந்த மாபெரும் மக்கள் பேரியக்கத்தின் 'பொதுச் செயலாளர்' எனும் பெரும் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றி வருகிறேன்!

எனக்கு கட்சி வேறு; தொண்டர்கள் வேறு அல்ல! கட்சியே எனது உயிர்மூச்சு! கட்சித் தொண்டர்களே எனது உயிர்நாடி!

எம்.ஜி.ஆரின் தியாகத்தால் உருவாகி, ஜெயலலிதாவின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுக, 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

"இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!" என்று ஜெயலலிதா முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!

இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!

தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Statement by Edappadi Palaniswami on the occasion of the 55th founding anniversary of the AIADMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments