தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சிவகங்கையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சிவகங்கை மாவட்டம் மேலமங்கலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில், 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி 'சுள்ளான்' மதன் என்பவர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement
இச்சம்பவம் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொடூரமான கொலை எனக் கூறப்படுகிறது. இரட்டைக் கொலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலிருந்து அண்மையில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் மீது பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்பதை உள்ளூர் காவல்துறையும் உளவுத்துறையும் முன்கூட்டியே கணிக்கத் தவறியது தவெக அரசின் மன்னிக்க முடியாத நிர்வாகத் தோல்வியாகும்.
மக்கள் வெள்ளமெனத் திரளும் ஒரு திருவிழாக் களத்தில், கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து மனிதவேட்டை நடத்தும் அளவுக்குத் துணிச்சல் அடைந்திருப்பது, உளவுத்துறை முற்றிலுமாக முடங்கிக் கிடப்பதையே படம்பிடித்துக் காட்டுகிறது.
காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதல்வர் விஜய், தேர்தல் மேடைகளில் பேசிய கவர்ச்சிகரமான வெற்றுப் பேச்சுகளோடு நின்றுவிட்டதால், தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயமே அற்றுப்போய்விட்ட சூழலில், முதல்வர் திரு. ஜோசப் விஜய் தனது நிர்வாக மெத்தனத்தைக் கைவிட்டு, இத்தகைய கூலிப்படைக் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு உடனடியாக ஒடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran has issued a statement regarding the incident in which famous rowdy Sullan Madan was chased and murdered in Sivaganga.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.