ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்!
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என சிபிஎம் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என சிபிஎம் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தது.
காவல் துறை தரப்பில் இதற்கு உரிய நேரத்தில் அனுமதி அளிக்கப்படாத நிலையில் ஆர்எஸ்எஸ் மாநில செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கில், பேரணிக்கு அனுமதி மறுக்க காவல் துறை கூறும் காரணங்களை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஏற்கனவே நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் முறைகளின் அடிப்படையில் உரிய அனுமதியை வழங்குமாறு உத்தரவிட்டார்.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 128 இடங்களில் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஆர்எஸ்எஸ் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிபிஎம் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்ட காலம் முதல் அதன் வளர்ச்சிக்கு அந்த அமைப்பு வன்முறையை ஒரு பிரதான வழிமுறையாகவே வைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வன்முறைகளுக்குப் பிறகே அது காலூன்றியுள்ளது. இந்தியா முழுவதும் அதுவே அனுபவம்.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படாமலும் தான் வசூலிக்கும் தொகைகளுக்கு வரி கட்டாமலும் அவற்றையெல்லாம் பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்.இன் நடவடிக்கைகள் அது சிற்சில நேரங்களில் செய்யும் பேரிடர் நிவாரண உதவிகள் அல்லது அவற்றை செய்தது போன்ற சித்தரிக்கப்பட்ட பொய்கள் இவற்றை ஆயுதமாக வைத்துக் கொண்டு தன்னை ஒரு அரசியல் சார்பற்ற அமைப்பு போல காட்டிக் கொள்ள முனைகிறது.
எனவே, குடிமக்கள் அமைப்பு என்று வரையறுத்து அவர்களின் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குவது வன்முறைக்கான வித்துக்களை தூவுவதே ஆகும். எந்தவொரு அமைப்பும் குறிப்பிட்ட பேரணிக்கு அனுமதி கோரினால் அதன் மீது நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.
அரசு நிர்வாகம், நீதித்துறை உள்ளிட்ட அரசின் அங்கங்களில் நேர்மையற்ற அதிகாரிகளின் துணையோடு தன்னை நிலைநிறுத்திக் கொண்டும் விஸ்தரித்துக் கொண்டும் சாட்டப்பட்ட குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொண்டும் நூறாண்டை கடந்து வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பயிற்சிகள், பேரணிகள், வகுப்புகள் அனைத்தும் தேச பக்தி அல்லது ஒழுக்கம் என்ற பகட்டின் மூலம் வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு வன்முறைகளுக்கும் அது காரணமாக அமைந்துள்ளது. ஆயினும், குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை எல்லா காலத்திலும் தப்பித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட தந்திரமாகவே உறுப்பினர் பட்டியலை பராமரிப்பதை தவிர்த்து வருகிறது.
ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அனுமதியளித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் இனிமேல் ஆர்.எஸ்.எஸ். அனுமதி பெற நீதிமன்றத்தை நாடவிடாதீர்கள் என்பது சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படாமல் அனுமதியளிக்க வேண்டுமென்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ்.சால் கடந்த காலங்களில் நடைபெற்ற வன்முறைகளைப் பற்றி கவலையின்றி நீதிமன்றம் இப்படி தீர்ப்பு சொல்லியிருப்பது கவலையளிக்கிறது.
எனவே, ஆர்.எஸ்.எஸ். பேரணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றும், உரிய முறையில் வழக்கை நடத்த வேண்டுமென்றும், அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டை காப்பதற்கு இது அவசியம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Permission for RSS rally: CPM urges Tamil Nadu government to appeal against High Court verdict!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.