நாம் தமிழர் கார்த்திகா கைதுக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கண்டனம்!
கார்த்திகா கைதுக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக...
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவின் கைதுக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள வந்த வழித்தடத்தில், காவல்துறை அனுமதியை மீறி கார்த்திகா செல்ல முயன்றார். அப்போது அவர் தடுக்கப்பட்ட நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக கார்த்திகா மீது தேர்தல் பிரசாரத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பிரசாரம் மேற்கொண்டது, முதல்வர் குறித்த அவதூறாகப் பேசியது என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல் துறையினர் அவரையும் அவரது கணவரையும் இன்று (அக். 20) காலை கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் கார்த்திகா தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று தில்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
கார்த்திகா, அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Anbumani's comments came after news broke that the Secretariat will be located in Pallavan's house.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.