FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆறுகளில் நுரைக்கு சோப்பு, ஷாம்பு காரணமா? குழந்தைகளுக்குக்கூட காரணம் தெரியும்! அன்புமணி

ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று அமைச்சர் ராஜிவ் கூறியதற்கு பாமக தலைவர் அன்புமணி பதில்...

அன்புமணி ராமதாஸ் (கோப்புப்படம்) - டிஎன்எஸ்
பகிர்:

ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பதுதான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது.

Advertisement

Advertisement

நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவதுதான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்ததுதான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவதுதான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பதுதான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்ததுதான்.

தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள்தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது.

இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும்போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Are soap and shampoo the reason for the foam in rivers, Even children know the answer: Anbumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments