பேராசிரியர் கலையரசன் கைது விவகாரத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும்: பெ.சண்முகம்
ஏதோ ஒரு நோக்கத்திற்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்பதற்காகவே காவல்துறை இப்படி நடந்திருக்கிறது என்று சண்முகம் கூறியிருப்பது குறித்து...
சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில்’பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏ.கலையரசன் கைது விவகாரத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் புகழ்மிக்க நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் அமைந்துள்ள ‘சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில்’பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏ.கலையரசன் நேற்று அதிகாலை 5 மணிக்கு சீருடை இல்லாத காவல்துறையினரால் நிர்ப்பந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவரது செல்போன் பறிக்கப்பட்டு உடை மாற்றக் கூட அனுமதிக்காமல் வாடகை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். சில மணி நேர அலைக்கழிப்பிற்கு பிறகு மீண்டும் வீட்டில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார். காவல்துறையின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்து அவதூறாக பதிவிடப்பட்டிருந்ததாகவும் அதில் அவரது புகைப்படம் இருந்ததாகவும் அதனால் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கலையரசன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களோடு தொடர்புடையவர். இந்தியாவின் திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்திருக்கிறார். தமிழ்நாடு திட்டக்குழுவின் சில உபகுழுக்களிலும் பணியாற்றியிருக்கிறார். பொருளாதார நிபுணர். அப்படிப்பட்ட ஒருவரை கைது செய்த முறை, காரணம், கைது செய்த நேரம், காவல்துறை நடந்து கொண்ட விதம் இவையனைத்தும் குறிப்பிட்ட இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு பதிவை முன்வைத்து அச்சுறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு செய்யப்பட்டதாகவே தெரிகிறது.
தனக்கு இன்ஸ்டாகிராம் ஐடி எதுவும் இல்லை என்றும் தனது புகைப்படத்தை யாரோ தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும், காவல்துறை இவற்றுக்கெல்லாம் செவி சாய்க்கவில்லை என்பது ஏதோ ஒரு நோக்கத்திற்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்பதற்காகவே காவல்துறை இப்படி நடந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
எனவே, தமிழ்நாடு அரசு அந்த குறிப்பிட்ட வலைத்தள கணக்கை தொடங்கியவர் யார்? பதிவிட்டது யார்? புகார் அளித்தது யார்? காவல்துறையினர் உரிய விசாரணையையும், வழிமுறைகளையும் பின்பற்றாமல் துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டது ஏன்? அவர்களுக்கு இந்த உத்தரவை அளித்தது யார்? என்பது குறித்து உரிய முறையில் விசாரித்து தவறிழைத்த அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Action must be taken against everyone who committed wrongdoing in the case of Prof Kalaiyarasan’s arrest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.