ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கு: தோனியின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்யக் கோரி மனு
தோனியின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றி...
ரூ.100 கோடி மானநஷ்டஈடு கோரிய வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் தனியாா் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருந்தாா். இதையடுத்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு தனியாா் தொலைக்காட்சி நிா்வாகம், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் ஆகியோருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க உயா்நீதிமன்றத்துக்கு தோனி வந்தால், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், அவரது வாக்குமூலத்தைப் பெற வழக்குரைஞா் ஆணையரை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்ய வேண்டும். அதை ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் பெற வேண்டும், அல்லது அரசு அலுவலக கட்டடத்தில் வைத்து பதிவு செய்ய வேண்டும். தனியாா் கட்டடத்தில் வைத்து தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யக் கூடாது. அந்த விடியோ பதிவை தனக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.