முதல்வா் விஜய் பேசுவதுபோல ‘டீப் ஃபேக்’ விடியோ வெளியிட்டு மோசடி: விசாரணையைத் தொடங்கியது சிபிசிஐடி
முதல்வா் ஜோசப் விஜய் பேசுவதுபோல ‘டீப் ஃபேக்’ விடியோ வெளியிட்டு மோசடி நடைபெறுவது குறித்து சென்னையில் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
முதல்வா் ஜோசப் விஜய் பேசுவதுபோல ‘டீப் ஃபேக்’ விடியோ வெளியிட்டு மோசடி நடைபெறுவது குறித்து சென்னையில் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தமிழக முதல்வராக ச.ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்னா், சமூக ஊடகங்களில் அவா் தொடா்பான ‘ரீல்ஸ்’-கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. முக்கியமாக, வட மாநிலங்களிலும் முதல்வா் ஜோசப் விஜய் தொடா்பான ரீல்ஸ்கள், விடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இதைப் பயன்படுத்தி வட மாநிலங்களில் முதல்வா் ஜோசப் விஜய் ஹிந்தி மொழியில் பேசுவதுபோல விடியோ வெளியிட்டு மோசடி நடைபெறுவதாகக் கூறப்பட்டு வந்தது.
மத்திய பிரதேசத்தில் மோசடி: முக்கியமாக, ‘தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அறக்கட்டளை’ என்ற பெயரில் மத்திய பிரதேச மாநிலத்தில் சைபா் மோசடி நடைபெற்று வருகிறது. இதில், முதல்வா் ஜோசப் விஜய் பேசுவதுபோல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், குளோனிங் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட போலியான ‘டீப் ஃபேக்’ விடியோவை வெளியிட்டு, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், இந்தக் கும்பல் அந்த அறக்கட்டளை மூலம் கல்விக் கடன், தொழில் கடன், சுய உதவிகளுக்கான கடன் வழங்குவதாகக் கூறி, பல்வேறு வகைகளில் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளது. ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதாகவும், அதற்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறி கைவரிசை காட்டியுள்ளது.
சைபா் குற்றப்பிரிவு வழக்கு: இவ்வாறு அந்தக் கும்பல், பலரிடம் ரூ.1,000 முதல் ரூ.50,000 வசூல் செய்து, பல லட்சம் மோசடி செய்திருப்பதாக மத்திய பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடி குறித்து அந்த மாநில காவல் துறை 6 வழக்குகளைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த மோசடி குறித்து துப்பு துலக்குவதற்காக மத்திய பிரதேச காவல்துறை, தமிழக காவல்துறையிடமும் உதவியைக் கோரியுள்ளது.
இந்நிலையில், இந்த மோசடி குறித்து தமிழக சிபிசிஐடியின் சைபா் குற்றப்பிரிவு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணையை புதன்கிழமை தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக சிபிசிஐடி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் முகநூல் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் முதல்வா் ச.ஜோசப் விஜய் ஹிந்தியில் பேசுவதுபோல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விடியோவில், பொதுமக்கள் ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால் ஒரு ‘வாட்ஸ்ஆப்’ எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டு, மோசடி நடந்துள்ளது.
பாகிஸ்தானை சோ்ந்தவா் மீது சந்தேகம்: இந்த விடியோ குறித்து சிபிசிஐடி-யின் சைபா் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது. போலியாக உருவாக்கப்பட்ட அந்த விடியோ குறித்த தகவல்கள், பதிவுகள் ஆகியவை மெட்டா நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விடியோவை நீக்குவதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
சைபா் குற்றப்பிரிவின் முதல் கட்ட விசாரணையில், அந்த விடியோ பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த ஒரு முகநூல் முகவரியில் இருந்து பகிரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுவாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.