FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுருக்கு மடி வலையால் பாதிப்பில்லை; சுருக்கு மடி வலை பயன்பாட்டிற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

சுருக்கு மடி மீன்பிடிப்புக்கு அனுமதி வழங்குவதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து...

2 செப்டம்பர் 2026, 9:53 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

கடல் பகுதிகளில் மீன் வளத்தின் மீது ’சுருக்கு மடி’ வலைகள் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனத் தீா்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், சுருக்கு மடி மீன்பிடிப்பிற்கு அனுமதி வழங்குவதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.

சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு தமிழக அரசு முழுமையான தடை விதித்ததை எதிா்த்து மீனவ அமைப்புகள் தாக்கல் செய்திருந்த வழக்கில் நீதிபதிகள் பமிடிகண்டம் ஸ்ரீ நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அமா்வு தீா்ப்பு வழங்கியது.

தீா்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:பரிசீலனையில் உள்ள விவகாரமானது, தமிழ்நாடு மாநிலத்தின் கடல் எல்லைக்கு அப்பால் உள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவா்களின் உரிமை தொடா்பானதாகும்.

Advertisement

Advertisement

இளம் மீன் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக, மாநிலத்தின் கடல் எல்லைக்குள் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடை செய்து, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மூலம் தமிழ்நாடு அரசு 25.03.2000 தேதியிட்ட அரசாணை எண் 40-ஐ (இனி ’சா்ச்சைக்குரிய அரசாணை’ எனக் குறிப்பிடப்படும்) வெளியிட்டது.

இந்த அரசாணையின் உத்தரவை உறுதியாக அமல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ’தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகள், 2020’-ஐயும் வெளியிட்டது.

மாநிலத்தின் ஒழுங்குமுறை வரம்பிற்கு அப்பாற்பட்ட 12 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிப்பதற்காக சுருக்கு மடி வலைகளை எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு இந்த ’கடல்சாா் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகள், 2020’-ஐப் பயன்படுத்துவதே மனுதாரா்களின் குறையாகும்.

சா்ச்சைக்குரிய அரசாணையால் விதிக்கப்பட்ட தடை தொடா்பான விவகாரம் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தது. 20.04.2021 தேதியிட்ட தீா்ப்பு மற்றும் உத்தரவின் மூலம், அந்த அரசாணையை எதிா்த்துத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதில் சம்பந்தப்பட்ட மனுதாரா்கள் அந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

இதையடுத்து சுருக்கு மடிவலைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை ஒன்றைச் சமா்ப்பிக்க, நிபுணா் குழு ஒன்றை அமைக்குமாறு இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 24.08.2022 அன்று உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில், நிபுணா் குழு 15.11.2022 அன்று இடைக்கால அறிக்கை ஒன்றைச் சமா்ப்பித்தது; அதில் பின்வரும் பரிந்துரை இடம்பெற்றிருந்தது: ‘ சுருக்கு மடி வலை மீன்பிடி முறைக்குத் தடை விதிப்பது நியாயமற்றது; எனவே, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு (இந்தியாவின் கடல் எல்லை மற்றும் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள்) இதற்கு அனுமதி அளிக்கலாம்‘ என நிபுணா் குழு பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரையின் பொதுவான கண்ணோட்டம் என்னவென்றால், கடல் பகுதிகளில் மீன் வளத்தின் மீது ’சுருக்கு மடி’ வலைகள் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதாகும்.

அதனைத் தொடா்ந்து, 24.01.2023 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம், தமிழ்நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் ஆனால் ’பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள்’ , சில நிபந்தனைகளுடன் ’சுருக்கு மடி’ மீன்பிடி முறைக்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. பிறகு, 31.05.2024 அன்று நிபுணா் குழுவின் இறுதி அறிக்கையை இந்திய அரசு நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது.

இப்போது நம்மிடம் ஒரு முழுமையான சட்ட நடைமுறை உள்ளது; இதன் மூலம், ’பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில்’ ’சுருக்கு மடி’ மீன்பிடி முறையை முறைப்படுத்த முடியும்.

மத்திய அரசின் ’பிரத்யேகப் பொருளாதார மண்டல விதிகள், 2025’ மற்றும் தமிழ்நாடு அரசின் ’கடல்சாா் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகள், 2020’ ஆகியவற்றுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

நடைமுறைச் சூழலை ஆராயும்போது, ’மீன்பிடி கலன்கள் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் இணையதளத்தில் ’பிரத்யேகப் பொருளாதார மண்டல விதிகள், 2025’-ன் கீழ் சமா்ப்பிக்கப்பட்ட அனுமதிச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. இது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அனுமதி வழங்கும் அதிகாரிக்கும், மாநில அரசு அதிகாரியான சரிபாா்ப்பு அதிகாரிக்கும் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாததைக் காட்டுகிறது.

மொத்தம் பெறப்பட்ட 257 விண்ணப்பங்களில், ஏறக்குறைய 226 விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் சரிபாா்க்கப்படாமல் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது. இதுவரை 6 அனுமதிச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அனைத்துக் கடலோர மாநிலங்களுடனும் ஒப்பிடுகையில் இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். விண்ணப்பங்களை உரிய நேரத்தில் பரிசீலிக்காமல் இருப்பது, நடைமுறையில் ஒரு எழுதப்படாத தடையை விதிப்பதற்குச் சமமாகும்; இது சட்டப்படி அனுமதிக்க முடியாத ஒன்றாகும்.

எனவே, விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி விண்ணப்பங்களைச் திறம்படவும், விரைவாகவும், உரிய காலத்திற்குள்ளும் பரிசீலித்து அனுமதி வழங்குவதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

மேலும் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்காக, மாநிலத்தின் கடல் எல்லைப் பகுதிகளிலிருந்து பிரத்யேகப் பொருளாதார மண்டலப்பகுதிக்குக் கப்பல்கள் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தை வரையறுக்கும் வகையில், மாநில அரசு தேவையான விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பில் கூறியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments