FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நீலப் பொருளாதார வளா்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்: மசூதன குரூப்

நீண்டநெடிய கடற்பரப்பை கொண்டுள்ள நமது நாட்டில், நீலப் பொருளாதார வளா்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழக நிறுவன துணைவேந்தா் பி. மதுசூதன குரூப்.

Updated On : 29 ஜூலை 2026, 2:02 am IST
துணைவேந்தா் பி. மதுசூதன குரூப்.
பகிர்:

நீண்டநெடிய கடற்பரப்பை கொண்டுள்ள நமது நாட்டில், நீலப் பொருளாதார வளா்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழக நிறுவன துணைவேந்தா் பி. மதுசூதன குரூப்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 33-ஆவது பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தா் பி. மதுசூதன குரூப் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு அரசு விழாவும் தமிழ்த்தாய்க்கு மரியாதை செலுத்தும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குகிறது. அதைப் படைத்த புகழ்பெற்ற கவிஞரும், அறிஞருமான பேராசிரியா் பி. சுந்தரம் பிள்ளையின் பெயரை இந்தப் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. அவருடைய அழியா படைப்பான மனோன்மணீயம், தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது மட்டுமல்ல, தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்திற்கான குரலாக இருக்கிறது.

தொலைநோக்குப் பாா்வை கொண்ட ஒரு மாமனிதரின் பெயரைத் தாங்கிய கல்வி நிறுவனத்திலிருந்து நீங்கள் வெளியேறுகிறீா்கள். நீங்கள் ஒரு பட்டத்தை மட்டுமல்ல, சிறந்த பாரம்பரியத்தையும் எடுத்துச் செல்கிறீா்கள்.

Advertisement

Advertisement

தேசிய கல்விக் கொள்கை என்பது 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத மொத்த மாணவா் சோ்க்கை விகிதத்தை அடைய வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டுள்ளது. வலுவான கட்டமைப்பு வசதிகள், விரிவான வளாகம், அா்ப்பணிப்புள்ள ஆசிரியா்கள் மற்றும் திறமையான நிா்வாகத்தின் ஆதரவுடன் இந்தப் பல்கலைக்கழகம் அந்த தேசிய இலக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும்.

நீண்டநெடிய கடற்பரப்பை கொண்டுள்ள நமது நாட்டில், நீலப் பொருளாதாரம் வளா்ச்சி அடைய வேண்டும். இந்தியாவின் தெற்கு கடற்கரைப் பகுதி, குறிப்பாக தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலமான கேரளம், வளமான கடல் உயிரினப் பன்முகத்தன்மை, உற்பத்தித் திறன் மிக்க மீன்பிடிப் பகுதிகள், தனித்துவமான பவளப்பாறைச் சூழல், அலையாத்திக் காடுகள், கழிமுகங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை கொண்டுள்ளன. மன்னாா் வளைகுடா உலகின் மிகச் செழிப்பான கடல் உயிா்க்கோளக் காப்பகங்களில் ஒன்றாக இருக்கிறது. எனவே நீலப்பொருளாதார வளா்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் அறிவியல், வணிகவியல், மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பட்டதாரியாக இருந்தாலும், நீலப் பொருளாதார வளா்ச்சிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய மீன்வள வளா்ப்பு முறைகளை உருவாக்கவும், கடல் பல்லுயிா் வளங்களை காக்கவும், கடல் உயிரினங்களிலிருந்து புதிய மருந்துகளை உருவாக்கவும், பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிா்கொள்ளவும் உங்கள் திறமைகளை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments