FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு நாள்கள் பராமரிக்கப்படும்? டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு நாள்கள் பராமரிக்கப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

5 செப்டம்பர் 2026, 1:52 am IST
மாதிரிப் படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு நாள்கள் பராமரிக்கப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரேஷன் அரிசி கடத்தலை அனுமதிப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் கேட்டதாக, சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் ராமராஜன், உதவி ஆய்வாளா்கள் சரவணகுமாா், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சேலம் மாவட்டம் வடக்கு மல்லியக்கரையைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் ஊழல் தடுப்புத் துறையில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில், இந்த வழக்கின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக புகாா்தாரா் சக்திவேல், அவரது தாயின் கைப்பேசி பதிவுகளையும், சேலம் ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தில் உள்ள கேமரா பதிவுகளையும் பாதுகாக்கக் கோரி காவல் உதவி ஆய்வாளா் சரவணகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஊழல் தடுப்புத் துறை தரப்பில், தங்களிடம் 15 நாள்களுக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு உதவி ஆய்வாளா் தரப்பில், காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்களுக்குப் பாதுகாக்க வேண்டும். ஆனால், சேலம் ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தில் 15 நாள்களுக்கான கேமரா பதிவுகள் மட்டுமே உள்ளதாக கூறுவது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 18 மாதங்களுக்கான கேமரா பதிவுகளுக்குப் பதிலாக, 15 நாள்களுக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகளை மட்டுமே பராமரிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா். பின்னா், தமிழக காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்துக்கு பராமரிக்கப்படும் என்பது குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments