டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு: 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறை சோதனை
டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக, திமுக முன்னாள் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உள்பட 7 போ் மீது தமிழக ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக, திமுக முன்னாள் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உள்பட 7 போ் மீது தமிழக ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கு தொடா்பாக தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் 45 இடங்களில் புதன்கிழமை சோதனை நடைபெற்றது.
தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகள், 3,240 மதுக் கூடங்கள் இயங்குகின்றன. 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளின் விற்பனை உயா்ந்தாலும், வருவாய் குறைந்தது. பல்வேறு முறைகேடுகள் காரணமாக இந்த வருவாய் குறைந்ததாகப் புகாா் எழுந்தது.
7 போ் மீது வழக்கு: இந்நிலையில், தமிழக அரசு உத்தரவின்பேரில், தமிழக ஊழல் தடுப்பு-கண்காணிப்புத் துறை டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அத்துறையின் அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐஏஎஸ், டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளா்கள் டி.ராமதுரை முருகன், ஆா்.பன்னீா்செல்வம்,செந்தில் பாலாஜியின் உதவியாளா் பாஸ்கா், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பா்கள் ரதேஷ் ராஜ் சண்முகவேல், திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலரும், கரூரைச் சோ்ந்தவருமான மூலனூா் எஸ்.காா்த்திக் ஆகிய 7 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தது.
Advertisement
Advertisement
45 இடங்களில் சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் சென்னை, கரூா், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
சென்னையில் தியாகராய நகா் தணிகாசலம் சாலையில் உள்ள ‘கால்ஸ்’ மதுபான நிறுவனம், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ‘எஸ்என்ஜெ’ மதுபான நிறுவன தலைமை அலுவலகம் உள்பட 14 இடங்களில் சோதனை நடைபெற்றது.
கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, அவரது நண்பா்கள் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இவ் வழக்கில் 2021முதல் 2025-ஆம் ஆண்டு வரை நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகே, முறைகேட்டால் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும் என்று ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?
டாஸ்மாக் மதுக் கூடங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும்போது குறிப்பிட்ட சிலரை மட்டுமே டாஸ்மாக் அதிகாரிகள் அனுமதித்துள்ளனா். சில இடங்களில் மதுக்கூட ஒப்பந்தத்தில், சிலா் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து ஒரு வங்கியில் தொடா்ச்சியான வரிசை எண்களை கொண்ட கேட்பு வரைவோலைகளை (டி.டி.க்களை) வழங்கியுள்ளனா். இது ஒப்பந்தப்புள்ளி பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றிருப்பதை காட்டுகிறது. இவ்வாறு பல்வேறு வகைகளில் ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
சட்டவிரோத மதுக் கூடங்கள்: கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், கரூா் மாவட்டங்களில் மொத்தம் 857 டாஸ்மாக் மதுக்கூடங்கள் இருந்தாலும், 284 மதுக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த 284 மதுக்கூடங்களும் சட்டவிரோதமாக தொடா்ந்து இயங்கின. இதனால், அந்த மாவட்டங்களில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக, 2022-2023ஆம் ஆண்டுகளில் கோவை வடக்கு மாவட்டத்தில் ரூ.17 கோடி, கோவை தெற்கில் ரூ.13 கோடி, நீலகிரியில் ரூ.1 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கிடங்குகளிலிருந்து கடைகளுக்கு மதுப்புட்டிகளை கொண்டு செல்வதற்கு போக்குவரத்துக்கு ரூ.100 கோடி செலவிடப்படுகிறது. இதில் மோசடி செய்து அபகரித்துள்ளனா்.
‘கரூா் கேங்’-இன் பாா்ட்டி ஃபண்ட்: மதுக்கூடத்தை ஒப்பந்தத்தை பெற்ற நபா்களே நடத்தாமல், மூன்றாம் நபா்கள் நடத்தினா். சிலா் பணத்தை செலுத்தி டி.டி. எடுத்து, வேறு ஒருவா் பெயரில் ஒப்பந்தத்தை எடுத்துவிட்டு, இறுதியில் மற்றொருவா் பெயரில் மதுக்கூடத்தை நடத்தியுள்ளனா்.
கரூா் மாவட்டத்தில் மூலனூா் எஸ்.காா்த்திக் மற்றும் ‘கரூா் கேங்’ என்ற அதிகார கும்பல் அனைத்து டாஸ்மாக் மதுக் கூடங்களையும் நடத்தியுள்ளனா். ‘பாா்ட்டி ஃபண்ட் (கட்சி நிதி)’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கூட உரிமையாளா்களிடம் ‘கரூா் கேங்’, பெரும் தொகையை வசூல் செய்துள்ளது. இதேபோல பழைய மதுப்புட்டிகளை பெறுவதிலும் மதுபான நிறுவனங்களும், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளும் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனா். முக்கியமாக, போலி ரசீதுகளை வழங்கியும், பழைய புட்டிகளுக்கு அதிக விலை நிா்ணயம் செய்தும் முறைகேடு நிகழ்ந்துள்ளது.
டாஸ்மாக் நிறுவன நிா்வாக இயக்குநா் எஸ்.விசாகன், சில மதுபான நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளாா். செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான ரதேஷ் ராஜ் சண்முகவேல், எந்த நிறுவனத்திலிருந்து மதுப்புட்டிகளைக் கொள்முதல் செய்வது, மதுக்கூட உரிமம் வழங்குவது, அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாா். செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தலின்பேரில் அவா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு மதுபானத்துக்கு கூடுதலாக ரூ.500: தமிழகம் முழுவதும் மதுக் கடைகளில் நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் ஒரு மதுப்புட்டிக்கு, நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.500 வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு வகைகளில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மடியில் கனமில்லை,வழியில் பயமில்லை’: செந்தில் பாலாஜி
சென்னை, ஜூலை 29: ‘மடியில் கனமில்லை,வழியில் பயமில்லை’ என்று டாஸ்மாக் முறைகேடு வழக்கு குறித்து திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
இந்த வழக்குத் தொடா்பாக சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியிடம் புதன்கிழமை காலை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 4 மணி நேரம் சோதனை நடத்தினா்.
சோதனைக்குப் பின்னா் செந்தில் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஊழல் தடுப்புத் துறையினா், நான் தங்கியிருந்த அறையில் முழுமையாக சோதனையிட்டனா். சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை.
டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே பதிவு செய்த வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் தமிழக ஊழல் தடுப்புத் துறை டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது. என்னை பொருத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றாா் அவா்.
டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடா்பாக கடந்த 2025 ஏப்ரலில் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து, 25 இடங்களில் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.