குஜிலியம்பாறை விவகாரம் அரசுக்கு தெரிய வராதது அதிகாரிகளின் தவறு! - அமைச்சர்கள் வருத்தம்!
குஜிலியம்பாறை வட்டாட்சியர் நடவடிக்கை குறித்து அரசுக்கு தெரியவராதது அதிகாரிகள் செய்த தவறு என தமிழக அமைச்சர்கள் விளக்கம்...
குஜிலியம்பாறை வட்டாட்சியரின் நடவடிக்கை குறித்து அரசுக்கு தெரிய வராதது அதிகாரிகள் செய்த தவறு எனக் கூறி தமிழக அமைச்சர்கள் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குஜிலியம்பாறை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த அய்யாச்சாமி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள மார்க்சிய மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் விவரங்களைச் சேகரித்து சமா்ப்பிக்க வருவாய் ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள இடதுசாரிகளுக்கு எதிராக வெளியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கை பெரும் பேசுபொருளானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் இன்று (செப். 4) சென்னையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் மாநிலச் செயலர் பெ. சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து உரையாடினர்.
இதுபற்றி, சிபிஎம் மாநிலச் செயலர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராதது அதிகாரிகள் செய்த தவறு என்றும், அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, குஜிலியம்பாறை விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியதைத் தொடர்ந்து, சொந்த விருப்பு வெறுப்பில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
TN ministers expressed regret to CPIM stating that it was a lapse on the part of officials that the government remained unaware of the action taken by the Guziliamparai Tahsildar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.