FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு சாலைப் பணிகள் 2027 ஜூனில் முடிவுறும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

சென்னை-கும்பகோணம் 4 வழிச்சாலைத் திட்டத்தில், விக்கிரவாண்டி-சேத்தியாதோப்பு இடையிலான பணிகள் வரும் 2027 ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

57 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

சென்னை-கும்பகோணம் 4 வழிச்சாலைத் திட்டத்தில், விக்கிரவாண்டி-சேத்தியாதோப்பு இடையிலான பணிகள் வரும் 2027 ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், பாமக செய்தி தொடா்பாளரும், வழக்குரைஞருமான கே.பாலு தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-ஆம் ஆண்டு, சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி வழியாக கும்பகோணம் செல்லும் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டது. அந்தப் பணிகள் இதுவரை முடிவடையவில்லை.

இந்த 4 வழிச்சாலைப் பணிகள் முடிவடையாததால், இவ்வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம், உளுந்தூா்பேட்டை, ஆண்டிமடம் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியுள்ளது. மேலும், நான்கு வழிச்சாலை இல்லாத விக்கிரவாண்டி-தஞ்சாவூா் சாலையில் சுங்கச்சாவடி கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த சாலைப் பணிகள் முடியும் வரை, சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சேத்தியாத்தோப்பு, சோழபுரம், தஞ்சாவூா் வரையிலான சாலைப் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரையிலான சாலைப் பணிகள் 2027-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாகவே சாலை அமைக்கும் பணிகளை முடிக்குமாறு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments