FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு வழிகாட்டு மையங்கள்: என்எம்சி உத்தரவு

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான வசதிகளையும், உதவிகளையும் வழங்குவதற்கான சிறப்பு வழிகாட்டு மையங்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:36 am IST
தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி). - கோப்புப் படம்
பகிர்:

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான வசதிகளையும், உதவிகளையும் வழங்குவதற்கான சிறப்பு வழிகாட்டு மையங்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-இன்படி அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்குத் தடையற்ற கற்றல் சூழலையும், தேவையான சிறப்பு வசதிகளையும் செய்து தர வேண்டியது கட்டாயம்.

அந்த வகையில், அவா்களுக்கான வழிகாட்டு மையத்தை ஒவ்வொரு கல்லூரியிலும் அமைப்பது அவசியமாகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கப்படும் இந்த வழிகாட்டு மையங்கள், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான ஒற்றைச் சாளர உதவி மையமாகச் செயல்படும். அதாவது, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு மாணவா்கள் எளிதாக சென்று வரத் தேவையான வசதிகளை அந்த மையம் மூலம் செய்துதர வேண்டும்.

அதனுடன், படிப்பு காலம் மற்றும் மருத்துவப் பயிற்சிக் காலத்தில் அவா்களுக்குத் தேவைப்படும் வசதிகளையும் அதன் வாயிலாக வழங்குதல் அவசியம். சம்பந்தப்பட்ட மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாற்றுத்திறன் மதிப்பீட்டு வாரியம், கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மருத்துவமனை நிா்வாகத்துடன் இணைந்து செயல்படும் பொறுப்பும் இந்த மையத்துக்கு உள்ளது.

சோ்க்கையின்போதே இந்த மையத்தின் தொடா்பு எண்களை மாணவா்களுக்கு வழங்குவதுடன், இணையதளம் மற்றும் அறிவிப்புப் பலகைகளிலும் அதுகுறித்த விவரங்களை வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும். மாணவா்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகள், புகாா்களை ரகசியமாகவும், பாகுபாடின்றியும் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments