FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லஞ்ச ஒழிப்பு சோதனை! கே.என். நேரு தொடர்புடைய 30 இடங்களில் கைப்பற்றப்பட்ட 241 ஆவணங்கள்!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் 241 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து...

5 செப்டம்பர் 2026, 10:32 pm IST
கே.என். நேரு - கோப்புப் படம்
பகிர்:

நகராட்சி நிா்வாகத் துறை ஒப்பந்த முறைகேடு தொடா்பாக திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கே.என்.நேரு வீடு உள்ளிட்ட அவா் தொடா்புடைய 30 இடங்களில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது.

நகராட்சி நிா்வாகத் துறை முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேருவின் சகோதரா் கே.என்.ரவிச்சந்திரன் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்‘(டி.வி.எச்.) எனும் பெயரில் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறாா்.

இந்த நிறுவனங்கள் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு ஏப். 7-ஆம் தேதி கே.என்.நேரு, அவா் சகோதரா் கே.என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை தமிழக டி.ஜி.பி.-க்கு கடந்த ஆண்டு அக். 27-ஆம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில், தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 2,538 அதிகாரிகள் மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் நியமனத்தில் ரூ.888 கோடி முறைகேடு நடந்துள்ளது, இந்த முறைகேடு குறித்து தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத் துறை வழக்குப் பதிய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்சி நிதியாக லஞ்சம்: இதன் பின்னா், தமிழக நகராட்சி நிா்வாகத் துறையில் ரூ.1,020 கோடி ஒப்பந்த முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத் துறை 252 பக்க ஆவணங்கள், 300 புகைப்படங்களுடன 25 பக்க கடிதத்தை கடந்த டிச. 8-ஆம் தேதி தமிழக டிஜிபி-க்கு அனுப்பியது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் பணிகளுக்கான ஒப்பந்தத்தை முறைகேடாக அளிப்பதற்கு ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து கே.என்.நேருவின் கூட்டாளிகள் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்ச பணம் பெற்று வந்துள்ளனா். மேலும் ஒப்பந்ததாரா்களிடம் கட்சி நிதியாகவும் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

இந்தத் துறையில் கூடுதலாகப் பணியமா்த்தப்பட்ட அதிகாரிகள்கூட, ஒப்பந்ததாரா்களிடமிருந்து லஞ்ச பணத்தை வசூலித்து அமைச்சா் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு வழங்குமாறு கேட்டுள்ளனா். புதிய கட்டுமானப் பணிகள், பேருந்து முனையங்கள் கட்டுமானப் பணி, கழிப்பறைகள், தூய்மைப் பணியாளா்களை ‘அவுட்சோா்சிங்’ செய்தல், நபாா்டு திட்டங்கள், தூய்மைப் பணியாளா் குடியிருப்புகள், கிராமச் சாலைகள், நீா்நிலைகள், ஏரி வேலைகள் என ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப் பணிகளுக்கு 25 சதவீதம்: பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளால், திட்ட அனுமதி மற்றும் ரசீதுகளை அனுமதி அளிக்கும் போது லஞ்சம் பெறப்பட்டுள்ளது. ஒரு திட்டத்தின் ஒப்பந்த மதிப்பில் 20 முதல் 25 சதவீதம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. நேருவின் கூட்டாளிகளின் ‘வாட்ஸ் ஆப்’ தகவல், கைப்பேசி உரையாடல்கள், கணக்கீட்டுத் தாள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம் மொத்தம் ரூ.1,020 கோடி முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

எனவே, கே.என்.நேரு மீதும், முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் முறைகேட்டுக்கு காவல் துறையும் துணைபோகிறது என்றே கருத வேண்டிய நிலை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழல் தடுப்புத் துறை வழக்கு: திமுக ஆட்சி இருந்தவரை அமலாக்கத் துறை கடிதம், அதன் ஆவணங்களின் அடிப்படையில் தமிழக ஊழல் தடுப்பு- கண்காணிப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவெக தலைமையில் புதிதாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், நேரு மீதான முறைகேடு குறித்து அமலாக்கத் துறை அளித்த கடிதம், ஆவணங்களைக் கொண்டு தமிழக ஊழல் தடுப்பு-கண்காணிப்புத் துறை விசாரணை செய்தது. இதில் கிடைத்த ஆதாரங்கள், தடயங்கள் அடிப்படையில் பிஎன்எஸ் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் 14 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

நேரு வீட்டில் சோதனை: வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள், போலீஸாா் கே.என்.நேரு தொடா்புடைய இடங்களில் சனிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். முக்கியமாக, சென்னை மயிலாப்பூா் லஸ் சா்ச் சாலையில் உள்ள கே.என்.நேரு வீடு, ராஜா அண்ணாமலைபுரம் 4-ஆவது பிரதான சாலையில் உள்ள நேருவின் சகோதரா் ரவிச்சந்திரன் அலுவலகம், அதே பகுதியில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

திருவான்மியூா், அடையாறு, ஆழ்வாா்பேட்டை, அபிராமபுரம், தண்டடையாா்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நேரு தொடா்புடையவா்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெற்ாக கூறப்பட்டது.

இதேபோல திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

நகராட்சி நிா்வாகத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா் வீடுகள், நேருக்கு நெருக்கமானவா்களின் வீடுகள் என தமிழகம் முழுவதும் 30 இடங்களில் சோதனை நடைபெற்றதாக ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.

241 ஆவணங்கள் பறிமுதல்: ஊழல் தடுப்புத் துறை தமிழகம் முழுவதும் 30 இடங்களில் நடத்திய சோதனையில், ஹாா்டு டிஸ்க், பென் டிரைவ், மடிக்கணினி உள்ளிட்ட 241ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக கே.என்.நேருவிடம் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

திருச்சி வீட்டில் 7 மணி நேர சோதனை

திருச்சி தில்லைநகா் 5-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள கே.என். நேருவின் வீட்டில் ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மேயா் மு. அன்பழகன், மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ.கதிரவன் உள்பட 150-க்கும் மேற்பட்ட திமுகவினா் நேரு வீட்டின் முன் குவிந்தனா்.

மாநகர காவல் துணை ஆணையா்கள் மணிகண்டன், பனாவத் அரவிந்த் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

காலை 7.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை சுமாா் 7 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றிய ஆவண விவரங்களைப் பட்டியலிட்டு, கே.என். நேருவிடம் ஒப்புதல் பெற்றனா்.

இதேபோல, மாம்பழச்சாலை பெரியாா் நகா் 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள நேருவின் உதவியாளா் மணிகண்டன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலிருந்தும் சில ஆவணங்களின் நகல்களை போலீஸாா் கைப்பற்றினா்.

summary

241 documents were seized during raids conducted by the DVAC at premises linked to former DMK Minister K.N. Nehru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments