FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கே.என். நேரு வீட்டில் சோதனை: எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை! நிர்மல் குமார்

கே.என். நேரு வீட்டில் சோதனை, முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சட்டப்பேரவை விவகாரம் உள்ளிட்ட கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்...

5 செப்டம்பர் 2026, 3:55 pm IST
அமைச்சர் நிர்மல் குமார் - DIN விடியோ கிளிப்
பகிர்:

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:

கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பியபோது, இதில் எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என்றார். லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும், புகார்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர்தான் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement

Advertisement

உதயநிதி கைது தொடர்பான கேள்விக்கு, பெண்களைப் பற்றி பொது மேடையில் தொடர்பில்லாமல் அவதூறாக பேசியதால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தார். நேரு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் என்ன நடந்துள்ளது என்பது தனக்கு தெரியாது என்றும், அது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர்தான் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

திமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, இரு கட்சிகளும் இணைந்து இருப்பது தற்போது தெரிகிறது என்றார். அதிமுகவும் திமுகவும் இணைந்து பாஜகவுடன் ஒரே கூட்டணியில் போட்டியிடும் வாய்ப்பும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், இவர்கள் யாருடன் சேர்ந்தாலும் எந்த தேர்தலிலும் எங்களை நெருங்க முடியாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

ராகுல் காந்தி – விஜய் பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்த கேள்விக்கு, “இதைப் பற்றி இப்போது யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு காலம் இருக்கிறது. பத்திரிகையாளர்கள்தான் இதனை மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாங்களெல்லாம் யாரும் இதைப் பற்றி பதிவு செய்யவில்லை” என்றார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர், சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளதாகவும், ஒவ்வொரு துறை வாரியாக முடிவுகள் எடுக்கப்படும்போது அனைத்து மாவட்டங்களையும் சேர்த்தே முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஏழை, எளிய மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அந்தந்த நேரத்தில் அரசு செய்யும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என கனிமொழி கூறியது குறித்த கேள்விக்கு, ஏழை, எளிய மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருப்பதாக தெரிவித்தார். “ஊழல்வாதிகளுக்குத்தான் பாதுகாப்பு இல்லை; அவர்களுக்குத்தான் வழக்குகள் உள்ளன” என்றார்.

முதல்வரின் பதிலுரை நாளில் கேள்வி நேரம் இல்லை என அறிவிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்த அமைச்சர், முதல்வர் அனைத்து விவகாரங்களுக்கும் சேர்த்து பதிலளிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் மானியக் கோரிக்கையும் இருப்பதால், மீண்டும் கேள்வி நேரம் வைத்தால் சட்டப்பேரவை கூட்டம் இரவு 9 மணியாகிவிடும் என்றும், இதுபோன்று சபை நடத்தப்பட்ட வரலாறு இல்லை என்றும் கூறினார்.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, பயணம் எதற்காக என்பது உள்ளிட்ட விவரங்களை முதல்வர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்றார். இருப்பினும், அடுத்த வாரம் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், முதல்வரின் நிகழ்ச்சிகள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதாகவும், மதுரையில் முதல்வர் நிகழ்ச்சி இருப்பதாக தங்களுக்கே தெரியாமல் சிலர் கூறி வருவதாகவும் தெரிவித்தார். முதல்வரின் நிகழ்ச்சிகள் குறித்து முதல்வர் அலுவலகத்திலிருந்தே அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றார்.

கோயில் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் சமூக வலைதளப் பதிவு குறித்து கேள்வி எழுப்பியபோது, கோயில் விஷயத்தில் தாங்கள் யாரும் தலையிட மாட்டோம் என்றும், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

முந்தைய அரசுகள் கோயில் விவகாரத்தில் செய்த தவறுகளை தங்கள் ஆட்சியில் செய்ய மாட்டோம் என்றும், கோயில் அறங்காவலர் குழுக்களில் திமுகவினர் மற்றும் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நியமித்தது போன்ற தவறுகள் தங்கள் ஆட்சியில் இருக்காது என்றும் கூறினார்.

பி.டி.ஆர். குடும்பத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இருந்து சில நிர்வாகிகள் தன்னை சந்தித்ததாகவும், மூன்று ஆண்டுகளாக தங்களை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள விடவில்லை என்றும், அறக்கட்டளையையும் முடக்கி வைத்திருப்பதாக அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

“சின்னச் சின்ன ஈகோவால் அவருடைய சொந்த குடும்பத்தினரின் அறக்கட்டளையையே செயல்படுத்த விடாமல் முடக்கி வைத்துள்ளார்” என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்தார். சட்டபூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து தருவதாக அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

கூட்டணிக்கான பெயர் குறித்த கேள்விக்கு, முதல்வரும் மற்ற கட்சிகளும் இணைந்து ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்பார்கள் என்றார். முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக அடுத்தகட்ட கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

summary

Raid at K.N. Nehru residence: No act of political vendetta: Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments