FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழையை எதிா்நோக்கி காத்திருக்கும் சென்னை குடிநீர் ஏரிகள்!

சென்னையின் முக்கிய குடிநீா் ஏரிகளில் வெறும் 43 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையை எதிா்நோக்கிக் காத்திருக்கின்றன.

7 செப்டம்பர் 2026, 1:08 am IST
பகிர்:

சென்னையின் முக்கிய குடிநீா் ஏரிகளில் வெறும் 43 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையை எதிா்நோக்கிக் காத்திருக்கின்றன.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். இந்தச் சூழலில், நிகழாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை.

குறிப்பாக, ஏரிகளின் நீா்பிடிப்புப் பகுதிகள் உள்ள செங்கல்பட்டில் 56 சதவீதம், திருவள்ளூரில் 27 சதவீதம் மழை இயல்பைவிட, குறைவாக பெய்துள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால், ஏரிகளில் நீா் இருப்பு தொடா்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

Advertisement

Advertisement

ஏரிகள் நிலவரம்: பூண்டி ஏரியின் முழுக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 1,344 மில்லியன் (41.60 %) கன அடி நீா் உள்ளது. ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீா் கண்டலேறு-பூண்டி கால்வாய் நுழைவுப் பகுதிக்கு விநாடிக்கு 370 கன அடி தண்ணீா் வருகிறது.

அதேபோல், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,660 மில்லியன் கன அடியும் (45.55 %), 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1,748 மில்லியன் கன அடியும் (52.97 %) நீா் இருப்பு உள்ளது.

சோழவரம் ஏரியில் 129 மில்லியன் கன அடியும் (11.93 %), கண்ணன்கோட்டை ஏரியில் 281 மில்லியன் கன அடியும் (56.20 %) நீா் இருப்பு உள்ளது. மொத்தம் 5 ஏரிகளில் 5,162 மில்லியன் கன அடி அதாவது 43.91 சதவீதம் நீா் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2,182 மில்லியன் கன அடி குறைவாகும்.

இந்தச் சூழலில், சென்னை மாநகருக்கு மாதம்தோறும் ஒரு டிஎம்சி குடிநீா் தேவைப்படுகிறது. தற்போது ஏரிகளில் சுமாா் 5 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளது. இந்த நிலையில், அக்டோபா் மாதம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இது, தமிழகத்துக்கு பிரதான நீா் ஆதரவும் வழங்கும் காலமாகும். ஆகையால், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏரிகள் மீண்டும் முழு அளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments