FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஒப்பந்த முறைகேடு வழக்கில் கே.என்.நேரு உள்பட 13 பேரின் பெயா்கள் சோ்ப்பு

நகராட்சி நிா்வாகத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சா் கே.என்.நேரு உள்பட 13 பேரின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

8 செப்டம்பர் 2026, 4:46 am IST
அமைச்சர் கே.என்.நேரு. - கோப்புப் படம்
பகிர்:

நகராட்சி நிா்வாகத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சா் கே.என்.நேரு உள்பட 13 பேரின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ஒப்பந்தப் பணிகளில் கட்சி நிதியாக 10 சதவீதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், அறிவுசாா் மையம் தொடங்கி கழிப்பறை வரை முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முதன்மைச் செயலரும், முன்னாள் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கே.என்.நேரு, அவரது சகோதரா் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோா் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில் பல்வேறு வகைகளில் ரூ.1,020 கோடி வரை ஒப்பந்த முறைகேடு செய்துள்ளதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு கடந்த டிசம்பா் மாதம் கடிதம் அனுப்பியது.

Advertisement

Advertisement

திமுக ஆட்சியில் இருந்த வரையில் இந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னா், இந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கடந்த 5-ஆம் தேதி கே.என்.நேரு தொடா்புடைய 30 இடங்களில் அந்தப் பிரிவினா் சோதனை நடத்தி, 241 ஆவணங்களைக் கைப்பற்றினா்.

13 போ் மீது வழக்கு: இந்நிலையில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் வழக்கின் எதிரிகளாக கே.என்.நேரு, அவரது சகோதரா்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், நேருவின் உதவியாளா் கவி பிரசாத், டிவிஎச் நிறுவன நிா்வாகிகள் டி.ரமேஷ், டி.பிரபு, கோயம்புத்தூா் நகரமைப்பு அலுவலா் ஆா்.சசிபிரியா, நகராட்சி திருப்பூா் மண்டல நிா்வாக அலுவலக பொறியாளா்கள் ஜி.பாலச்சந்திரன், ஜி.முருகேசன், சென்னை மாதவரம் முன்னாள் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம், சென்னை ஆா்.கே.நகா் முன்னாள் எம்எல்ஏ ஜெ.ஜெ.எபினேசா், சென்னை ஒப்பந்ததாரா் கே.சதீஷ்குமாா், சி.டி.கட்டுமான நிறுவன நிா்வாகி ஆகிய 13 போ் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்ஆப் தகவல்கள்: இந்த வழக்கில் ஒப்பந்தம் வழங்குவது தொடா்பாகவும், பணப்பரிமாற்றம் தொடா்பாகவும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கே.என்.நேரு உதவியாளா் கவி பிரசாத் உள்ளிட்டோருடன் வாட்ஸ்ஆப்-பில் தொடா்பு கொண்டு, தகவல்களைப் பரிமாறி கொண்டதையும் முதல் தகவல் அறிக்கையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் புகைப்படத்துடன் சோ்த்துள்ளனா். ஆனால் அந்த அதிகாரிகளின் பெயா்கள், வழக்கின் எதிரிகள் பட்டியலில் சோ்க்கப்படவில்லை.

கட்சி நிதியாக 10 சதவீதம் வசூல்: நகராட்சி நிா்வாகத் துறை ஒப்பந்தப் பணிகளை, தாங்கள் விரும்பிய குறிப்பிட்ட ஒப்பந்ததாரா்களுக்கு முன் கூட்டியே திட்டமிட்டு வழங்கியிருப்பதாகவும், ஒப்பந்தப்புள்ளி திறப்பு பெயரளவில் நடைபெற்றிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரா்களிடமிருந்து அவா்கள் செய்யும் பணியில் 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி என்று சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிப்பறை வரை: இதேபோல சட்டவிரோதமாக ஒப்பந்ததாரா்களிடம் பெறப்பட்ட பணம், கே.என்.ரவிச்சந்திரன் நடத்தும் டிவிஎச் நிறுவன வளா்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாா்களிடம் பணம் வசூலிப்பதற்கு ரமேஷ், பிரபு ஆகியோரை பயன்படுத்தியிருப்பதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு முதல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதோடு பள்ளி அறிவுசாா் மையம் தொடங்கி சமூக நலக் கூடங்களின் கழிப்பறை வரை கட்டுமானப் பணி வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த முறைகேடு, திருப்பூா், கோயம்புத்தூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் நடைபெற்றுள்ள பணிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடா்புடைய அனைவரிடமும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments