ஒரு கேள்விக்காவது முதல்வர் விஜய் பதில் சொன்னாரா? மிசா பற்றி அமைச்சர்கள் படிக்க வேண்டும்! பெ. சண்முகம்
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம்...
தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னையில் நாளை (செப். 9) நடைபெறவுள்ளது. இதையொட்டி தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று ஆலோசனை நடத்தியது.
இதன்பின்னர், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்தார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும் என்று கூறினார்.
தொடர்ந்து நேற்று பேரவையில் முதல்வர் பேசியது பற்றி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"சட்டமன்றம் என்பது சண்டை மன்றமாக இருக்கிறது. மக்கள் பிரச்னைகளை பேசும் மன்றமாகவும் அதற்கு தீர்வு காணும் மன்றமாகவும் சட்டமன்றம் நடக்க வேண்டும். அது இப்போது 'கத்தல்' மன்றமாக நடைபெறுவதை ஏற்க முடியாது.
சட்டமன்றம் முறையாக நடப்பதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இருவருக்கும் பொறுப்பு இருக்கிறது, இதில் ஆளும் கட்சிக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். முன்பு நேரலை கிடையாது. சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இதையெல்லாம் சொல்லக்கூடாது என்று பேரவைத் தலைவர் சொன்னால் அது வெளியே தெரியாது. ஆனால் இப்போது மக்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்போது சட்டமன்றம் வேண்டாம் என்று மக்கள் நினைக்கும் மோசமான நிலைக்கு போய்விட்டது. சட்டமன்றம் மக்களுடைய வரிப்பணத்தில் நடக்கிறது. அது விரயம் ஆகக் கூடாது. முறையாக நேரம் பயன்படுத்தப்பட வேண்டும். எங்களைவிட இங்கு ஊழலை எதிர்த்து போராடிய வேறு கட்சியை சொல்லுங்கள் பார்க்கலாம்.
நேற்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைக்கான பதிலில், முதல்வர் ஜோசப் விஜய் நேற்று சட்டமன்றத்தில் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசினார். காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்காவது பதில் சொன்னாரா?
அவர் பேசுவதற்கு நிறைய இடம் இருக்கிறது. பொதுக் கூட்டத்தில் பேசலாம், தெருவில் பேசலாம். விவாதத்தின்போது பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் முறையாக பதிலளிக்கவில்லை. இதுவரை இதுபோன்று நடக்கவில்லை. மானியக் கோரிக்கைக்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர, நினைத்ததை எல்லாம் பேசுவோம் என்று முதல்வர் சட்டமன்றத்திதை பயன்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுக்கூட்டத்தில் பேச வேண்டியதை எல்லாம் சட்டமன்றத்தில் பேசி கத்தல் மன்றமாக மாற்றப்பட்டு விட்டது.
தவெக அமைச்சர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முதலில் நீங்கள் படிக்க வேண்டும். அவர்களுக்கு அதுதான் அறிவுரை. 'இஸ்மாயில் கமிஷன் அறிக்கை' என்ற ஒரு அறிக்கை இருக்கிறது. சென்னையில் சிறைச் சாலைகளில் மிசா காலத்தில் நடைபெற்ற கொடுமைகள், வன்கொடுமைகள் பற்றி ஒரு கமிஷன் போடப்பட்டு ஒரு அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
மிசாவில் கைதானவர்கள் சமூக விரோதிகள் என்று நிர்மல் குமார் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. அறியாமையில் பேசுவது. ஓராண்டுக்கு மேலே எங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறையில் இருந்திருக்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருகிறார்கள். திமுக மீதுள்ள கோபத்தில் வார்த்தைகளை பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
மிசா கால கொடுமைகள் தொடர்பாக இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் நிறைய ஆவணங்கள் இருக்கின்றன. அதை அமைச்சர்கள் தயவுசெய்து படித்து தெரிந்துகொள்ள வேண்டும். சர்க்காரியா கமிஷன் எதற்காக போடப்பட்டது என்பது தெரியும். முறையாக குற்றச்சாட்டு இல்லை, யார் மீதும் வழக்கு போடவில்லை, யாரும் கைது செய்யப்படவில்லை.
முதல்வர் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். எதிர்க்கட்சி தலைவர் சவால் விடுகிறார். அதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? அதைவிட்டு 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுகிறார். இது திசைதிருப்பும் தந்திரம். ஊழல், முறைகேடு நடந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் சிபிஎம் உறுதியாக இருக்கிறது. தவெக உறுதியாக இருக்கிறதா? என்பதுதான் எனது கேள்வி" என்று கடுமையாக விமர்சித்தார்.
Did Chief Minister Vijay answer even a single question: CPIM P Shanmugam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.