FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தவெக தலைமையில் உருவாகிறது புதிய கூட்டணி! பெயர் என்னவாக இருக்கலாம்?

தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகிறது என்றும் பெயர் இன்று அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்..

9 செப்டம்பர் 2026, 3:47 pm IST
தவெக கூட்டணி அறிவிப்பு - X | Vaiko
பகிர்:

சென்னையில் இன்று நடைபெறவுள்ள தவெக ஆதரவுக் கட்சிகளின் 2-ஆவது ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகப் போகிறது என்றும், இந்தக் கூட்டத்தின் நிறைவில், புதிய கூட்டணியின் பெயர்கூட அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சியமைத்திருக்கும் தவெகவுக்கு, ஆதரவு அளித்திருக்கும் கட்சிகள் பங்கேற்கும் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, தவெகவுக்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும், அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

ஆதரவுக் கட்சித் தலைவர்களை வரவேற்கும் வகையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய், பனையூர் அலுவலகத்துக்கு முன்கூட்டியே வருகை தந்துள்ளார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளில், தவெக சார்பில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், இடைத்தேர்தலுக்கு முன்பாக, தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துவார் என்றும், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணியின் பெயரை அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கூறியிருப்பதன் மூலம், இடதுசாரிக் கட்சிகள் ஆட்சிக்கு ஆதரவு வழங்கியிருக்கிறோம். ஆனால், கூட்டணியில் இடம்பெறவில்லை என்பதை சொல்லும் வகையில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிறது.

மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் ஏற்கனவே அதிமுக வசம் இருந்தவை. தற்போது தவெக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்தும் பேசப்படலாம். இவ்விரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு கட்சித் தலைமை காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே தவெக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்து இடைத்தேர்தலுக்கு முன்பு கூட்டணியை உருவாக்கி, இன்று கூட்டணியின் பெயரும் அறிவிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மதிமுக நிர்பந்திக்கப்பட்டது, கடந்த 3 ஆண்டுகளாக திமுக - விசிக இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது போன்றவை புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பை அதிகரித்துள்ளன.

விசிக, தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது. அமைச்சரவையிலும் அங்கம் வகித்து வருகிறது. ஆனால் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவிக்கை வெளியிடாத நிலையில் புதிய கூட்டணியில் இடம்பெறுவாரா என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments