FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி: மாவட்ட கனிம நிதியை 2 வாரங்களில் விடுவிக்க உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்காக மாவட்ட கனிம நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்யாமல், 2 வாரங்களில் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

19 செப்டம்பர் 2026, 1:56 am IST
கோப்புப் படம்
பகிர்:

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்காக மாவட்ட கனிம நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்யாமல், 2 வாரங்களில் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டுக்கான கனிம நிதி அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவில் உள்ளது. அதிலிருந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்காக ரூ.5 கோடியை உடனடியாக ஒதுக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.வி.பாலசுப்பிரமணியம், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு, கனிம நிதியை விடுவிப்பது தொடா்பாக மாவட்டக் குழுக்களின் ஒப்புதலைப் பெற்று நடவடிக்கை எடுக்கும்டி, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி நடந்த செயலா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிதி பயன்பாடு தொடா்பான கட்டுப்பாடுகள் காரணமாக, கனிம நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த வைகோ, கடந்த மாா்ச் மாதம் பிறப்பித்த அந்த உத்தரவைத் தொடா்ந்து, ‘செழுமைக் கருவூலம்’ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்பட்டுத்தியுள்ளது. உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிா என்பதை தெரிந்துகொள்ள மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். 8 மாவட்டங்களில் இந்தப் பணிகள் தொடங்கியுள்ளன. தாமிரபரணி, வைகை ஆற்றங்கரைகளில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றும் பணிகளைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. விதிகளைக் காரணங்காட்டி, நிதியை விடுவிக்க தாமதம் செய்யக்கூடாது. இரண்டு வாரங்களில் கனிம நிதியை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனா். மேலும், நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை அக். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments