FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் மின்வெட்டு பிரச்னை: அரசு அலட்சியமாக இருப்பதா? அன்புமணி கேள்வி

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு பிரச்னை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி...

24 செப்டம்பர் 2026, 3:10 pm IST
பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். - DNS (கோப்புப்படம்)
பகிர்:

ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் மின்வெட்டு சிக்கலை தீர்க்காமல் அரசு அலட்சியமாக இருப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

எனினும் இன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்ட கூட்டங்களிலேயே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

"திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இன்று காலை நடைபெற்ற செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார கலந்தாய்வுக் கூட்டத்தின்போது மின் தடை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டும், அடிக்கடி ஏற்படும் மின் தடைகளும் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது. தலைநகரம் சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் அழுத்தம் சீராக இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மட்டும் கோவை பகுதியில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் சேதமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 100 கோடி ரூபாய்க்கும் கூடுதலான கருவிகள் சேதமடைந்துள்ளன.

வழக்கத்தைவிட மின்சாரத்தின் தேவை அதிகமாக இருப்பதுதான் மின் வெட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையிலிருந்து வாங்கப்படுவதாகவும், அதனால் மின்வெட்டு சீராகி விட்டதாகவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், கள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டை சரி செய்வது சாத்தியமில்லாத செயல் அல்ல. தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைவிட உற்பத்தியும், கொள்முதலும் சேர்ந்து 2000 மெகாவாட் குறைவாக இருப்பதுதான் மின் வெட்டுக்கு காரணம் ஆகும்.

தேசிய சந்தையில் மின்சாரம் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்துகூட மின்சாரம் வாங்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் முழுமையாக மேற்கொள்ளப்படாதது மின்வெட்டு மற்றும் மின் தடைக்கு காரணம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முதல்வர் விஜய் நேரடியாக ஆய்வு செய்த பிறகும் மின்வெட்டு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் இனியும் அலட்சியம் காட்டாமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வெட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

PMK Leader Anbumani Ramadoss questioned TVK govt on powercut crisis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments