FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக முதல்வரிடம் விசாரிக்க வேண்டும் என்று திமுக மனு...

வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

ஜெம் வீரமணி வழக்கில் முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு திமுக கோரிக்கை வைத்துள்ளது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வழக்கு நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கில் பல முக்கிய பெரும்புள்ளிகள் சிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர். பாலு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மனு அளித்துள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி முதலமைச்சர் விஜய், ஜெம் வீரமணியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பாதுகாத்ததாகப் பொதுவெளியில் குற்றஞ்சாட்டினார். அதே நாளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஜெம் வீரமணியை திமுக பாதுகாத்ததோடு, அவர் மீதான வழக்கையும் தவறாக முடித்து வைத்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஜெம் வீரமணியைப் பாதுகாப்பதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் அவரிடமிருந்து 500 கோடி ரூபாய் பெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொதுவெளியில் இவர்கள் மூவரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மூன்று விதமாகக் கருத வாய்ப்பிருக்கிறது. முதலில் அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. எங்கள் கட்சியின் மீதும் மற்றும் கட்சித் தலைவர்கள் மீதும் அவதூறு பரப்ப முன் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக இந்த மூவரிடமும் இந்தக் குற்றம் தொடர்பான மிக முக்கியத் தகவல்கள் உள்ளன. ஆனால் போக்சோ சட்டப்படி அவற்றை விசாரணை அதிகாரியிடம் கொடுக்கவில்லை. மூன்றாவதாக புலனாய்வு அதிகாரியின் “கேஸ் டைரி”யில் உள்ள விசாரணைத் தகவல்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் கிடைக்கிறது; அவற்றைப் பொது வெளியில் பரப்புகிறார்கள்.

 மாநிலத்தின் முதலமைச்சரும் இரு அமைச்சர்களும் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டுகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, இக்குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை அவர்களிடமிருந்து உடனடியாகப் பெறுவது அவசியமாகும்.

 அவர்களிடம் ஆதாரங்கள் உள்ளனவா? இருந்தால், அவற்றை இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்காதது ஏன்? விசாரணை தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு அனுமதியின்றிக் கிடைத்துள்ளனவா? அவற்றிலுள்ள தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளுக்கும் விடை காண வேண்டும்.

சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள இவ்வழக்கில், ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கோ மறைக்கப்படுவதற்கோ இடமளிக்காமல் அவற்றை உடனடியாகச் சேகரிக்க வேண்டும். அதுதான் விசாரணை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே பொய்யாக முன்வைக்கப்பட்டிருந்தாலோ, சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ, விசாரணை ரகசியங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பொருந்தக்கூடிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு. அதேவேளையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எத்தகைய உயர்பதவியில் இருந்தாலும், அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

ஆகவே, முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்கள் உள்ளிட்ட மூவரையும் “சம்மன்” செய்து விசாரிக்க வேண்டும்” என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

summary

Gem Veeramani Case: Chief Minister and Ministers Must Be Questioned! – DMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments