மதுரை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
தமிழக முதல்வர் விஜய் திங்கள்கிழமை பச்சிளம் குழந்தைகளுக்கான ஒரு கிராம் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
மதுரை: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை(செப்.28) பச்சிளம் குழந்தைகளுக்கான 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
தாய்மையை கௌரவித்தல், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை மேற்கொள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதை ஊக்குவித்தல் ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கங்களாகும்.
முதல்வரின் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னிட்டு, விமான நிலையம் முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறை செய்துள்ளது.
Advertisement
Advertisement
மாநிலம் தழுவிய அளவில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில், 25 குழந்தைகளுக்கு 22 காரட் தங்க மோதிரங்களை முதல்வர் விஜய் அணிவிக்கிவுள்ளார். 2026 ஜூன் 22 தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக, இந்த திட்டத்தின் முதற்கட்ட அமலாக்கத்திற்குத் தேவையான 1.28 லட்சம் தங்க மோதிரங்களை மாநில அரசு ஏற்கனவே கொள்முதல் செய்துள்ளது.
இதையடுத்து, ரூ.10.25 கோடி செலவில் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வா் விஜய் திறந்துவைக்கிறாா். பின்னா், இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள், அவா் பயன்படுத்திய பொருள்களைப் பாா்வையிடுகிறாா். பின்னர், மாலை 4.30 மணியளவில் புகழ்பெற்ற மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லவுள்ளார்.
செப்டம்பர் 17-இல் நடைபெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரம்மாண்டமான மகா கும்பாபிஷேக விழாவிற்குப் பிறகு, மதுரைக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
முதல்வரின் அதிகாரப்பூர்வ பயணம் காரணமாக, மதுரை நகரம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, நகரம் முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் வருகையின்போது, நகரம் முழுவதும் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. கோயிலுக்கு அருகிலுள்ள சித்திரை வீதிகள் மற்றும் காந்தி மண்டபம் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் போதுமான எண்ணிக்கையிலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவனியாபுரம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோயிலில் தரிசனம் செய்த பிறகு, முதல்வா் விஜய் மாலை 5.30 மணி அளவில் அங்கிருந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் செல்கிறாா். பின்னா், அங்கிருந்து மாலை 6 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னைக்குச் செல்கிறாா்.
Tamil Nadu Chief Minister C Joseph Vijay will launch the one-gram gold ring scheme - Maternal Uncle gold ring scheme (Thaaimaman Thanga mothiram thittam) - to newborn babies at the Government Rajaji hospital here on Monday
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.