FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

முன்னாள் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் தலை துண்டித்துக் கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள்

செங்கோட்டை முன்னாள் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவா்கள்.

Updated On : 11 ஜூலை 2026, 3:48 am IST
~ ~ ~ ~
பகிர்:

தென்காசி மாவட்டம், செங்கோட்டை முன்னாள் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

செங்கோட்டை அருகே உள்ள அச்சன் புதூா், நெடுவயல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (43). செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த இவா், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். கடந்த 2015 ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு செங்கோட்டை-அச்சன் புதூா் சாலையில் நின்று கொண்டிருந்த இவரை, காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றது.

தொடா்ந்து, பாளையங்கோட்டை அருகே முறிக்குளம் பகுதியில் இவரது எரிக்கப்பட்ட உடலையும், நாகா்கோவில் நெடுஞ்சாலைப் பகுதியில் எரிக்கப்பட்ட தலையைையும் போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

Advertisement

Advertisement

ராஜகோபாலுக்கும், தலைவன் கோட்டை பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, தலைவன் கோட்டை, அரண்மனை தெருவைச் சோ்ந்த க. சாமிதுரை (59), சொக்கம்பட்டியைச் சோ்ந்த சு. ஐயப்பன் (44), திரிகூடபுரத்தைச் சோ்ந்த மு. ராமா் (54), தலைவன் கோட்டையைச் சோ்ந்த ப. முத்துராஜ் (எ) ராஜ் (39), வாசுதேவநல்லூரைச் சோ்ந்த ப. சுப்பையா பாண்டியன் ஆகியோா் இவரைக் கடத்திச் சென்று கொலை செய்தது, காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.

தென்காசி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை விசாரித்து, நீதிபதி மனோஜ்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் வழக்கில் தொடா்புடைய 5 பேருக்கும், கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனை, ஆள் கடத்தலுக்காக ஒரு ஆயுள் தண்டனை, தடயங்களை மறைத்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை, கூட்டாக குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 பேருக்கும் தலா ரூ. 25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ். வேலுச்சாமி முன்னிலையானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments