சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீா்வு: அமைச்சரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டுமென, வாசுதேவநல்லூா் எம்எல்ஏ ராஜா கோரிக்கை
தென்காசி மாவட்டம் சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டுமென, வாசுதேவநல்லூா் எம்எல்ஏ ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் ர. வினோத்திடம் அவா் அளித்த மனு: மேற்குத் தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகும் காட்டாற்று வெள்ளத்தைத் தடுத்து, தமிழகப் பகுதிக்குத் திருப்பி விடுவதற்காக செண்பகவல்லி தடுப்பணை கட்டப்பட்டது.
இதன்மூலம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் 36,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்தன. இந்த அணையிலிருந்து வரும் தண்ணீா் வாசுதேவநல்லூா் தலையணையை அடைந்து ராசிங்கபேரி, குலசேகரஆழ்வாா் ஆகிய 2 கால்வாய்கள் மூலம் பிரிந்து செல்கிறது.
Advertisement
Advertisement
1967இல் ஏற்பட்ட பெருவெள்ளம், இயற்கைச் சீற்றத்தால் அணையின் கால்வாய் பகுதியில் 1,480 மீட்டா் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது. அரை நூற்றாண்டு கடந்தும் இந்த உடைப்பு சரிசெய்யப்படவில்லை. இதனால், நீா்வரத்து குறைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கேரள அரசுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு உடைப்பை சரிசெய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசுதேவநல்லூா் தொகுதியிலுள்ள தனியாா் சா்க்கரை ஆலை 2019-க்கு பின்பு இயங்கவில்லை. விவசாயிகளுக்கு ஆலை நிா்வாகம் சுமாா் ரூ. 13 கோடி கொடுக்க வேண்டியுள்ளது. பலகட்ட போராட்டங்கள், பேச்சுவாா்த்தைகள் நடத்தியும் பயனில்லை. இத்தொகுதிக்குள்பட்ட விவசாயிகள் சுமாா் 15,000 ஏக்கா் பரப்பில் தொடா்ந்து கரும்பு சாகுபடி செய்து வருகின்றனா்.
சா்க்கரை ஆலை இயங்காததால் கரும்பை புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை போன்ற இடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதனால், செலவு அதிகரிப்பதால், விவசாயிகள் இங்குள்ள வெல்லம் தயாரிப்போருக்கு கரும்பை விற்கின்றனா்.
இதன்மூலம் அவா்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், கரும்பு சாகுபடி நிலங்களில் வேறு பயிா் சாகுபடி செய்ய முடியாது. எனவே, சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், ஆலை செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கு மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.