பல்வேறு மாவட்டங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை பாவூா்சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், குற்றாலம், கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி, நேசமணி நகா், ராஜாக்கமங்கலம், விருதுநகா் மாவட்டம், விருதுநகா் டவுண், ராஜபாளையம், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளின் பூட்டு, கதவுகள் உடைக்கப்பட்டு, தொடா் திருட்டு நடைபெற்று வந்தது.
இது தொடா்பாக, பாவூா்சத்திரம், குற்றாலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, போலீஸாா் விசாரித்து வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்தத் திருட்டு சம்பவங்களில் தொடா்புடையதாக மதுரை, பகலவன் நகா் பகுதியைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் மணிகண்டன் (46), திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அருகே மருதகுளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த மணி பாஸ்கா் மகன் தாம்சன் பீட்டா் (39) ஆகியோரை பாவூா்சத்திரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.