ஆலங்குளம் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி: ஜனவரிக்குள் நிறைவுபெறும் என எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டத்தின் முக்கிய வணிக நகரங்களில் ஒன்றான ஆலங்குளத்தில் ரூ. 4.35 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் ஜனவரி மாதத்துக்குள் நிறைவடைந்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் 43 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கா் பரப்பளவில் கடந்த 1983-ஆம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்தப் பேருந்து நிலையம், காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி மிகவும் சிதிலமடைந்தது. குறிப்பாக, பயணிகள் பயன்படுத்தி வந்த கட்டடங்களின் உறுதித்தன்மை கேள்விக்குறியானது.
பழைய பேருந்து நிலையத்தை அகற்றி, நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இக்கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த பிப்ரவரியில் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த கடைகள் காலி செய்யப்பட்டு, மாா்ச் 1-ஆம் தேதி புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. தற்போது கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 39 கடைகள், சுகாதார வளாகம், பயணிகள் காத்திருக்கும் பகுதி, பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி இறக்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ஒருங்கிணைந்த முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிகள் தவிப்பு: இதுகுறித்து திமுக பிரமுகா் ஜெயபாலன் கூறியதாவது
பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கி 9 மாதங்களாகின்றன. இதனால் பொதுமக்கள் மழை, வெயில் பாராமல் சாலைகளில் காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண்கள், குழந்தைகளுடன் வருவோா், மாணவா்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றாா்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் எட்வின் ஜோஸ் கூறியதாவது:
புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 60 சதவீதத்திற்கும் மேலாக நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து, இன்னும் இரண்டு மாதங்களில் பேருந்து நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
ஜனவரியில் பணிகள் நிறைவடைந்து புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டால், ஆலங்குளம் மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகும்.