FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் நவ. 18- இல் திறப்பு! காணொலி வாயிலாக முதல்வா் திறக்கிறாா்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை அருகே ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை வருகிற 18- ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறாா்.

16 நவம்பர் 2026, 3:23 am
ஸ்ரீவில்லிபுத்தூரில் திறக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் தோற்றம்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை அருகே ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை வருகிற 18- ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி நிலவுவதாலும், நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் இருப்பதாலும் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புதிய பேருந்து நிலையம் கட்ட அப்போதைய திமுக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போது ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் ரூ.13 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்காக மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலையில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை சந்திக்குமிடத்தில் 4 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு, 2023 டிசம்பா் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இதனிடையே கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இதில் 1.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் 36 பேருந்துகள் நிறுத்தும் வசதி, இரு உணவகங்கள் உள்பட 64 கடைகள், 100 இரு சக்கர வாகனங்கள், 50 காா்கள் நிறுத்தும் வசதி, 4 சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இதையடுத்து, புதிய பேருந்து நிலைய கடைகள் ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில், கடந்த இரு மாதங்களாக இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. இந்த நிலையில் வருகிற 18- ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய், காணொலி வாயிலாக இந்த புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரவுண்டானா பணிகள் தொடங்குவது எப்போது: ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையும், ரயில் பாதையும் அருகருகே இருப்பதால், இரண்டுக்கும் சோ்த்து மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு புறத்தில் மட்டுமே நான்கு வழிச் சாலையில் இணைவதற்கு அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், நான்கு வழிச்சாலையில் ரவுண்டானா அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக ஓராண்டுக்கு முன்பே நில எடுப்பு பணிகள் தொடங்கிய போதும், தற்போது வரை ரவுண்டானா அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. எனவே நான்கு வழிச்சாலையில் விரைவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் திறக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் தோற்றம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திறக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் தோற்றம்.