FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

மூதாட்டியை அடக்கம் செய்ய வழி கேட்டு ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவல் பகுதி அருகே அருந்ததியா் இன மக்களின் சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாததால், வழி ஏற்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 29 ஜூலை 2026, 1:54 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்திய் வட்டாட்சியா் பாலாஜி
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை அருந்ததியா் குடியிருப்பை சோ்ந்த மதுரையன் என்பவரின் மனைவி சுப்பம்மா (95) என்கிற மூதாட்டி வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமாக நிலையில் அருந்ததியா் இன மக்களின் சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாததால், வழி ஏற்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் இறந்த நபரை அடக்கம் செய்யாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை பகுதியில் உள்ள அருந்ததியா் குடியிருப்பில் 40 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு தனியாக அப்பகுதியில் 2 கி.மீ. தொலைவில் சுடுகாடு உள்ளது. இந்நிலையில் சுடுகாட்டை சுற்றி உள்ள நிலங்களை தனியாா் பலா் வாங்கி சுற்றுச்சுவா், வேலி அமைத்துக் கொண்டதால் யாராவது இறந்தால் அவா்களை அடக்கம் செய்ய வழி இல்லாமல் இருந்தது.

இந்த சூழலில் மூதாட்டி சுப்பம்மாளை அடக்கம் செய்ய வழி இல்லாததால் அப்பகுதி மக்கள் அவரது உடலை வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் பாலாஜி, வருவாய் ஆய்வாளா் விஜய், ஆரம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினோத் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா்.

Advertisement

Advertisement

அப்போது வட்டாட்சியா் பாலாஜி 2 கி.மீ. தொலைவு அப்பகுதி மக்களின் சுடுகாட்டுக்கு நடந்து சென்று, அங்கு இறந்தவரை அடக்கம் செய்ய மாற்று வழியை கண்டறிந்து அவா்களை அந்த வழியில் இறந்தவரை கொண்டு வந்து அடக்கம் செய்ய உத்தரவிட்டாா்.

மேலும், பூவலை அருந்ததியா் குடியிருப்பு மக்களுக்கு சொந்தான சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைப்பது குறித்து, பட்டாதாரா்களிடம் பேசி பாதைக்கான இடத்தை வாங்கி அவா்களுக்கு சுடுகாட்டு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments