கவலை தரும் நூல் விலை
பின்னலாடைத் துறையில் உற்பத்திக்கு உகந்த காலமாக கருதப்படும் தற்போதைய சூழலில், ஜவுளித் துறையின் மூலப்பொருளான நூல் விலை உயர்வு தொழில் துறையினரைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.
வணிகம்கவலை தரும் நூல் விலை
பின்னலாடைத் துறையில் உற்பத்திக்கு உகந்த காலமாக கருதப்படும் தற்போதைய சூழலில், ஜவுளித் துறையின் மூலப்பொருளான நூல் விலை உயர்வு தொழில் துறையினரைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.
பின்னலாடைத் துறையில் உற்பத்திக்கு உகந்த காலமாக கருதப்படும் தற்போதைய சூழலில், ஜவுளித் துறையின் மூலப்பொருளான நூல் விலை உயர்வு தொழில் துறையினரைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. இதனால் பல கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் கைநழுவிப் போகவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு இல்லாமல் கட்டுக்குள் இருந்த நூல் விலை, தற்போது மீண்டும் கிடுகிடுவென ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. சரியாக கூற வேண்டும் என்றால், கடந்த ஆண்டு மே மாதம் கிலோவுக்கு ரூ.7 விலை ஏறத் தொடங்கி, ஜூனில் ரூ.5, ஜூலையில் ரூ.10, மீண்டும் ஜூலை 15-ஆம் தேதியில் ரூ.8, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.10 என, கிலோவுக்கு ரூ.40 வரை நூல் விலையேற்றம் கண்டது.
தொடர்ந்து, அப்போதைய பாதிப்புகளுக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் ரூ.7 விலை குறைந்து, சரிவு காரணமாக அக்டோபர் மாதத்தில் ரூ.7, நவம்பரில் ரூ.10, டிசம்பரில் ரூ.5, என விலை குறைந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் விலையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படவில்லை.
இந்நிலையில் தற்போது விலை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கி, கடந்த பிப்ரவரி மாதத்தில் கிலோவுக்கு ரூ.10, மார்ச் தொடக்கத்தில் ரூ.12 உயர்ந்தது. வரும் 15-ஆம் தேதிக்கு மேல் மேலும் ரூ.5 விலை உயரவுள்ளதாகவும், பஞ்சு விலை உயர்வு காரணமாக வரும் நாள்களில் இந்த விலை உயர்வு தொடரவுமே வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் ஹொசைரி நூல் வியாபாரிகள் சங்க செயலாளர் ஏ.டி.அண்ணாமலை கூறுகையில், பஞ்சு விலை உயர்வே நூல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. 6-ஆம் எண் நூல் தொடங்கி 100-ஆம் எண் நூல் வரையுள்ளது. அதில், பின்னலாடை துறையினர் 10-ஆம் எண் முதல் 60-ஆம் எண் வரையுள்ள நூல் ரகங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்துக்குமே விலை உயர்ந்துள்ளன. தவிர, பிற ஜவுளி உற்பத்தி ரகங்களின் நூல்களும் உயர்ந்துள்ளன. நூல் விலை அடுத்து வரும் மாதங்களிலும் உயரவே வாய்ப்புள்ளது என்றார்.
மத்திய, மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு
அடுத்தடுத்த விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூலினை விநியோகம் செய்யாமல் நூல் உற்பத்தியாளர்கள் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் சிறிய அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தொழிலை நம்பி உபதொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னலாடை நிறுவனங்கள் ஏற்கெனவே பெற்ற ஆர்டர்களை ஒப்பந்த விலைக்குள் முடிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களை கட்டுபடியாகும் விலைக்குள் எடுக்க முடியாமலும் திணறி வருகின்றனர். அந்த வகையில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் முடங்கியுள்ளது. தவிர, பல கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் கைநழுவி பிற நாடுகளுக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.
ஆனால், பின்னலாடைத் துறையின் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிப்பதில்லை. இந்திய பஞ்சு கழகமோ (சி.சி.ஐ.,) நிலையான விலையேற்றத்தினைச் செய்வதில்லை. பஞ்சு மற்றும் நூலினைப் பதுக்கி வைத்து, செயற்கைப் பற்றாக்குறை ஏற்படுத்தப்படுகிறது.
நூல் விலை உயர்வு தொடர்ந்தால், தொழில் நலிவடைந்து, தொழிலாளர் பாதிப்பு மற்றும் இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்படும், என்பன உள்ளிட்ட கருத்துகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன.
ஊக வணிகத்தை கட்டுப்படுத்த வேண்டும்
இதில், ஒரு கணினியை வைத்து, அதில் நாள்தோறும் விலை விவரங்களைப் பார்த்து, சரக்குகளைக் கொள்முதல் செய்து, அடுத்து வரும் நாள்களில் உள்ள விலை நிலவரங்களைப் பார்த்து கொள்முதல் செய்த சரக்குகளை கணினி மூலமே விற்றுவிடலாம். ஒருவர் அவருக்கு சிறிதளவும் சம்பந்தமே இல்லாத பொருள்களை வாங்குவது இதில் நடைபெறுகிறது. இதுதான் நூலுக்கு மூலப்பொருளான பஞ்சு விவகாரத்திலும் நடைபெறுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. பொருளாதார வலிமை மிக்க நிறுவனங்கள் போட்டி போட்டு, விலையை ஏற்றிக் கொடுத்து அதிக சரக்குகளை கொள்முதல் செய்வதால், பின்னர் யாரும் அந்த சரக்குகளை வாங்க, அவர்களையே நாட வேண்டும், என்பதுதான் இதில் சூசகமான விஷயம்.
பஞ்சு கொள்முதலில் இந்த ஊக வணிக முறை உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: பின்னலாடைத் துறையைப் பொருத்தவரை, நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலம் அதிக சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியில் செல்லும் நேரமாகும். அதே போல் புதிய பஞ்சு வரத்துக்கான காலமும் இதுதான். அதனால் தற்போது பஞ்சு, நூல் விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது.
இதற்கு ஊக வணிகம் மூலமாக பெருநிறுவனங்கள் பஞ்சு வாங்குவதும், விற்பதும் முக்கியக் காரணமாக உள்ளது. இதில் பஞ்சை மட்டும் ஒரு வரையறைக்குள் கொண்டு வர மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம். அதே நேரத்தில் பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளை பாதிப்படையச் செய்யும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
நூல் விலையால் பாதிக்கப்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஆர்டர் அளித்த வெளிநாட்டு வாடிக்கையாளரிடமே, ஏற்படும் இழப்பை கேட்டுப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தித் தேக்கம் போன்றவற்றால் ஏற்படும் தொழில் பாதிப்பை ஈடுகட்ட உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றார்.
பண்டகச் சந்தையில் பஞ்சு வியாபாரம் அதிகரிப்பு
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) செயலாளர் கே.செல்வராஜ் கூறியது:
பஞ்சு 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி விலை தற்போது ரூ.43,300 வரை உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கேண்டிக்கு ரூ.6,000 விலை அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் பண்டகச் சந்தையில் பஞ்சு விற்பனை அதிகரித்துள்ளது. அமெரிக்கா, வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இதில் நேரடியாகப் பங்கு கொள்கின்றன. பஞ்சு விலை உயர்வுக்கு பண்டகச் சந்தையில் நடைபெறும் ஊக வணிகம் முக்கியக் காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், நடப்பு சீசனில் விவசாயிகளுக்குப் பஞ்சுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. கடந்த சீசனுடன் ஒப்பிடுகையில், நடப்பு சீசனில் விவசாயிகளுக்கு ரூ.5,000 கூடுதல் விலை கிடைத்துள்ளது. பருத்தி பற்றாக்குறை உள்ள சூழலில், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திருப்பது, அடுத்த ஆண்டு நாட்டில் அதிகமானோரைப் பருத்தி பயிரிடச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பருத்தி உற்பத்தி அதிகரிக்கும். பற்றாக்குறை பிரச்னை தீரும். விலையும் குறைவதற்கான சூழல் ஏற்படும்.
பருத்தியை அத்தியாவசியப் பொருள் சட்டத்திலிருந்து எடுத்துவிட்டதால், இந்த விலை ஏற்ற, இறக்கங்கள் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றின் மீது சட்ட நடவடிக்கை கொணர முடியாது. மேலும் இதில் நிலையான விலை கிடைக்கும் வாய்ப்புகளும் குறைவு. பஞ்சாலைகளுக்கு குறைந்த வட்டியில் பஞ்சு வாங்க கடன் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே சர்வதேச பெருநிறுவனங்களுடன் போட்டி போட்டு பஞ்சு வாங்க முடியும்.
தற்போதைய சூழலில் பஞ்சாலைகள் தேவைக்கேற்ற அளவில் மட்டுமே பஞ்சு வாங்கி வருகின்றன. அடுத்த சில மாதங்களுக்குப் பஞ்சு மற்றும் நூல் விலை சரிவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றார்.