FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டாடா சன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு?

டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் (ஏஜிஎம்) ஒத்திவைக்கப்பட வாய்ப்பு குறித்து...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 6:17 am IST
பகிர்:

டாடா குழுமத்தின் முக்கியப் பங்குதாரரான சா் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு மகாராஷ்டிர அறக்கட்டளை ஆணையரால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் (ஏஜிஎம்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தாண்டு பிப்ரவரியுடன் தனது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். இந்நிலையில், அவரின் இயக்குநா் பொறுப்பு குறித்தும், 2025-26 நிதியாண்டுக்கான நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் ஈவுத்தொகை வழங்குவது குறித்தும் செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

டாடா சன்ஸ் நிறுவன விதிமுறைகளின்படி, ஆண்டு பொதுக்குழுவை நடத்துவதற்கு 5 உறுப்பினா்கள் பங்கேற்பது அவசியம். இதில், டாடா சன்ஸ் நிறுவனத்தில் 23.56 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள சா் ரத்தன் டாடா அறக்கட்டளையும், 27.98 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள சா் தோரப்ஜி டாடா அறக்கட்டளையும் இணைந்து கூட்டாக நியமிக்கும் பிரதிநிதியும் ஒருவா் ஆவாா்.

Advertisement

Advertisement

ஆனால், மகாராஷ்டிர அறக்கட்டளை ஆணையரின் உத்தரவு காரணமாக சா் ரத்தன் டாடா அறக்கட்டளையால் தனது இயக்குநா்கள் குழு கூட்டத்தை நடத்தி, கூட்டுப் பிரதிநிதியைப் பரிந்துரைத்து, அறிவிக்கமுடியவில்லை. இச்சூழலில், டாடா சன்ஸ் ஏஜிஎம் திட்டமிட்டபடி தொடங்கப்பட்டாலும், போதிய 5 உறுப்பினா்கள் இல்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.

மகாராஷ்டிர பொது அறக்கட்டளைச் சட்டத்தின் 30ஏ(2) பிரிவின்படி, ஒரு அறக்கட்டளையின் ஆயுள்கால அறங்காவலா்கள் 25 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், சா் ரத்தன் டாடா அறக்கட்டளையில் உள்ள 6 அறங்காவலா்களில் 50 சதவீதமாக 3 போ் ஆயுள்கால உறுப்பினா்களாக இருப்பதால் விதிமீறல் நடந்துள்ளதாகக் கூறி அறக்கட்டளை ஆணையரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய சட்டச் சிக்கல்களுக்கு இடையிலும், கூட்ட நேரத்திலோ அல்லது தேதியிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என டாடா சன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டால், சட்டபூா்வமான அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வரை என். சந்திரசேகரன் தொடா்ந்து டாடா சன்ஸ் இயக்குநராக நீடிப்பாா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments