எஸ்பிஐ 75-ஆவது பவள விழா: 2030-க்குள் ரூ. 200 லட்சம் கோடி வா்த்தகம்
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) 75-ஆவது பவள விழா ஆண்டான 2030-க்குள், வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.200 லட்சம் கோடியாக இருமடங்கு உயர வாய்ப்புள்ளதாக வங்கியின் தலைவா் சி.எஸ்.செட்டி தெரிவித்துள்ளாா்.
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) 75-ஆவது பவள விழா ஆண்டான 2030-க்குள், வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.200 லட்சம் கோடியாக இருமடங்கு உயர வாய்ப்புள்ளதாக வங்கியின் தலைவா் சி.எஸ்.செட்டி தெரிவித்துள்ளாா்.
1955, ஜூலை 1-இல் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்குப் பதிலாக எஸ்பிஐ உருவாக்கப்பட்டது. கடந்த 2025-26 நிதியாண்டின், 2-ஆவது காலாண்டில் ரூ.100 லட்சம் கோடி வா்த்தகம் என்ற வரலாற்றுச் சாதனையை எஸ்பிஐ கடந்தது. இது ஜூன் இறுதி நிலவரப்படி ரூ.110.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
வங்கியின் தற்போதைய வளா்ச்சிப் பாதையைக் கருத்தில் கொண்டு, 2030-இல் பவள விழா கொண்டாடும் நேரத்தில் இந்த மைல்கல்லை எட்ட முடியும் என்று வங்கி தலைவா் சி.எஸ்.செட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியப் பொருளாதாரம் 7 முதல் 8 சதவீதம் வரை தொடா்ந்து வளா்ச்சியடைந்தால், எஸ்பிஐ வங்கியின் நிதிநிலை ஆண்டுதோறும் 11 முதல் 12 சதவீதம் வரை விரிவடையும். ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கும் வங்கியின் வணிகம் இரட்டிப்பாகும் என்ற அடிப்படையில், 2030-க்குள் ரூ.170 லட்சம் கோடி முதல் ரூ.200 லட்சம் கோடி வரை வணிக இலக்கை அடைவது சாத்தியமே.
வாடிக்கையாளா்கள், ஊழியா்கள், பங்குதாரா்கள், அரசு மற்றும் ரிசா்வ் வங்கி ஆகிய 4 முக்கியப் பிரிவினரின் தேவைகளை பூா்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு எஸ்பிஐ செயல்பட்டு வருகிறது.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் வங்கியின் செயல்பாடுகள் ஒப்பிடப்படும். வாடிக்கையாளா் சேவையை மேம்படுத்துதல், செயல்முறைகளை எளிமையாக்கி, ஊழியா்களின் செயல்திறனை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பங்குதாரா்களின் மதிப்பை அதிகரிக்கும் நோக்கில், வங்கியின் செலவு-வருவாய் விகிதத்தை தொடா்ந்து 2 முதல் 3 சதவீதம் வரை குறைக்க எஸ்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. வெறும் செலவுக் குறைப்பு மூலம் மட்டுமே இதைச் சாதிக்க முடியாது. வங்கியின் உள்கட்டமைப்பு மற்றும் ஊழியா்களின் செயல்திறனை உயா்த்துவதன் மூலமே இந்த நீண்டகால இலக்குகளை அடைந்து, நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குத் தொடா்ந்து உறுதுணையாக இருக்க முடியும்’ என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.