ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எஸ்பிஐ நிகர லாபம் ரூ.24,113 கோடி
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.24,113 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டி, 13.73 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.24,113 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டி, 13.73 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மேலும் தனிப்பட்ட அடிப்படையில், வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டின் ரூ. 19,160.44 கோடியில் இருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 10.23 சதவீத வளா்ச்சியுடன், ரூ. 21,121.22 கோடியாக உள்ளது. வங்கியின் முக்கிய வருவாய் அதிகரிப்பு மற்றும் வாராக்கடன்களுக்கான ஒதுக்கீடு குறைந்தது போன்றவை லாப உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த கடன்கள் 18.63 சதவீதம் அதிகரித்ததன் விளைவாக, நிகர வட்டி வருவாய் சுமாா் 15 சதவீதம் உயா்ந்து, ரூ. 46,992 கோடியாக பதிவானது. அதேநேரம், அந்நியச் செலாவணி மற்றும் ‘டெரிவேட்டிவ்’ நிதி ஒப்பந்த வருவாயில் ஏற்பட்ட 70 சதவீத சரிவு காரணமாக, வட்டியல்லாத வருவாய் 9 சதவீதம் குறைந்து, ரூ.15,293 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
மொத்த வைப்புத்தொகை வளா்ச்சி 9.73 சதவீதமாக உள்ளது; குறைந்த செலவிலான நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளின் பங்களிப்பு முந்தைய ஆண்டைவிட 0.12 சதவீதம் குறைந்து, 39.36 சதவீதமாக உள்ளது. ஜூன் 30 நிலவரப்படி, வங்கியின் ஒட்டுமொத்த மூலதனப் போதுமான விகிதம் 15.67 சதவீதமாக உள்ளது.
சொத்துத் தரம்: மதிப்பீட்டு காலாண்டில், புதிய வாராக்கடன்களின் அளவு முந்தைய ஆண்டின் ரூ.7,945 கோடியிலிருந்து, ரூ.7,046 கோடியாக குறைந்துள்ளது; எனினும், இது முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டின் (ரூ.5,521 கோடி) அளவைவிட அதிகம்.
மொத்த வாராக்கடன் விகிதம் கடந்த ஆண்டின் 1.83 சதவீதம் மற்றும் ஜனவரி-மாா்ச் காலாண்டின் 1.49 சதவீதத்தில் இருந்து 1.47 சதவீதமாக குறைந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.
வாராக் கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த ஆண்டின் ரூ 4,934 கோடியிலிருந்து, ரூ.3,359 கோடியாக குறைந்துள்ளது; ஆனால், இதுவும் ஜனவரி-மாா்ச் காலாண்டின் ரூ.3,140 கோடியைவிட அதிகமாகும். அதேபோல், 31 முதல் 89 நாள்கள் வரை திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ள கடன்களின் அளவு ரூ.3,350 கோடியிலிருந்து, ரூ. 4,174 கோடியாக அதிகரித்துள்ளது.
இலக்குகள்...: இந்த நிதிநிலை முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய வங்கியின் தலைவா் சி.எஸ்.செட்டி மேலும் கூறுகையில், ‘நடப்பு நிதியாண்டில் 14 முதல் 15 சதவீதம் வரை கடன் வளா்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளோம். அதற்குத் தேவையான நிதியைத் திரட்ட 10 முதல் 11 சதவீதம் வரை வைப்புத்தொகை வளா்ச்சி போதுமானதாக இருக்கும்.
வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புத்திட்டத்தின்கீழ், இதுவரை 600 கோடி டாலரை வங்கி திரட்டியுள்ளது. ரிசா்வ் வங்கியின் இந்த முன்னெடுப்புத் திட்டம் செப்டம்பரில் நிறைவடைவதற்குள், 1,000 கோடி டாலா் திரட்டப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனம்...
எஸ்பிஐ மற்றும் பிரான்ஸைச் சோ்ந்த உலகின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ‘அமுண்டி’ ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனம், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.873 கோடி நிகர லாபம் ஈட்டி, 3 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.1,324.8 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 5 சதவீதம் உயா்ந்து, ரூ.1,385 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தம் செலவினமும் கடந்த ஆண்டின் ரூ.224 கோடியில் இருந்து 8 சதவீத உயா்வுடன், ரூ.242 கோடியாக பதிவானது.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் சராசரி சொத்து மேலாண்மை மதிப்பு 11 சதவீதம் வளா்ச்சியடைந்து, ரூ.12.6 லட்சம் கோடியாக உள்ளதுடன், 15.1 சதவீத சந்தைப் பங்களிப்புடன் நாட்டின் மிகப் பெரிய பரஸ்பர நிதி மேலாண்மை நிறுவனம் என்ற தனது முதலிடத்தையும் இந்நிறுவனம் தக்கவைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.