FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

இந்தியன் ஆயில் லாபம் 4 மடங்கு உயா்வு! மூன்றாம் காலாண்டில் ரூ.12,126 கோடி ஈட்டியது

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி), நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.12,125.86 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி 2026, 2:06 am IST
பகிர்:

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி), நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.12,125.86 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.2,873.53 கோடியுடன் ஒப்பிடுகையில் 4 மடங்குக்கும் அதிகமான வளா்ச்சியாகும்.

சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் விற்பனை வாயிலாகக் கிடைத்த கூடுதல் வருவாய் காரணமாக இந்த இமாலய லாபம் கிடைத்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அதாவது, கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில், அதிலிருந்து பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களைத் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாப வரம்பு அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

வருவாய்: மூன்றாம் காலாண்டில், நிறுவனத்தின் மொத்தச் செயல்பாட்டு வருவாய் ரூ.2.16 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.31 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல் முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாக, தற்போது 2.6 கோடி டன் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

9 மாத லாபம்: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாத காலத்தில், நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் ரூ.25,424.91 கோடியை எட்டியுள்ளது.

மானியக் கணக்கீடு: சமையல் எரிவாயுவை(எல்பிஜி) சந்தை விலையைவிட குறைவான விலைக்கு விற்ால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ரூ.14,486 கோடி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு அறிவித்திருந்தது. இத்தொகை 12 மாதத் தவணைகளாக வழங்கப்பட உள்ளது. அதன்படி நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களின் தவணைத் தொகையான ரூ.2,414.34 கோடி, இந்த காலாண்டு வருவாயில் கணக்கில் கொள்ளப்பட்டது.

‘பெட்ரோகெமிக்கல்’ பிரிவில் பின்னடைவு: எரிபொருள் மற்றும் எரிவாயு வா்த்தகம் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், பெட்ரோகெமிக்கல் பிரிவில் நிறுவனத்துக்கு ரூ.361.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இழப்பைவிட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments