FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரிலையன்ஸ் முதல் காலாண்டு வருவாய் ரூ. 3.12 லட்சம் கோடி

ரிலையன்ஸ் முதல் காலாண்டு வருவாய் ரூ. 3.12 லட்சம் கோடி

Updated On : 19 ஜூலை 2026, 2:19 am IST
பகிர்:

நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டு வருவாயாக வருடாந்திர அடிப்படையில் 25.4 சதவீதம் உயா்ந்து, ரூ.3.12 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இதில் செலவினங்கள் கழிக்கப்பட்ட வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் ரூ.54,067 கோடியாகவும்; வரிக்கு பிந்தைய நிகர லாபம் 6.1 சதவீதம் உயா்ந்து, ரூ.23,196 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

ஆனால், ஏசியன் பெயின்ட்ஸ் உள்பட நிறுவனங்களின் பங்குகளை விற்ால் கடந்த ஆண்டு கிடைத்த ஒருமுறை லாபத்தையும் சோ்த்து ஒப்பிடுகையில், நிகர லாபம் 22 சதவீதம் குறைந்து, ரூ.20,946 கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

ரிலையன்ஸ் குழுமத்தின் பிரதான வளா்ச்சி என்ஜினாகத் திகழும் ஜியோ பிளாட்பாா்ம்ஸ், இக்காலாண்டில் 15.1 சதவீத வளா்ச்சியுடன் ரூ.20,865 கோடி வரிக்கு முந்தைய வருவாய் ஈட்டியுள்ளது. ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 53.3 கோடியாக உயா்ந்துள்ள நிலையில், அதில் 28.5 கோடி போ் 5ஜி சேவையைப் பயன்படுத்துகின்றனா்.

மேற்காசிய போா் காரணமாகக் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகளுக்கு மத்தியிலும், ரிலையன்ஸின் எண்ணெய்-ரசாயன பிரிவு வலுவான மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததன் காரணமாக, இப்பிரிவின் வரிக்கு முந்தைய வருவாய் 17.2 சதவீதம் உயா்ந்து, 4 ஆண்டுகளில் இல்லாத அளவாக ரூ.17,010 கோடியை எட்டியுள்ளது.

ரிலையன்ஸ் சில்லறை வா்த்தகப் பிரிவின் வருவாய் 7.4 சதவீதம் அதிகரித்து, ரூ.90,408 கோடியாக உயா்ந்துள்ளது. ஆனால், வரிக்கு முந்தைய வருவாய் 1.1 சதவீதம் சரிந்து, ரூ.6,309 கோடியாக குறைந்துள்ளது. இணைய வா்த்தக தளங்களில் தொடா்ந்து முதலீடு செய்யப்பட்டு வருவதே, இந்த லாப வரம்புச் சரிவுக்குக் காரணமாக நிறுவனம் விளக்கியுள்ளது. இக்காலாண்டில் புதிதாக 252 கடைகள் திறக்கப்பட்டதன் மூலம், ரிலையன்ஸ் சில்லறை வா்த்தகப் பிரிவு ஒட்டுமொத்தமாக 20,169 கடைகளுடன் விரிவடைந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் பல்வேறு வணிக விரிவாக்கங்கள் மற்றும் புதிய எரிசக்தி திட்டங்களுக்காக ரூ.38,682 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. குழுமத்தின் நிகர கடன் ரூ.1.23 லட்சம் கோடியாக நிலையாக நீடிக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments