FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

எல்ஐசியின் 70 ஆண்டுகால சேவை!

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), 70 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

2 செப்டம்பர் 2026, 3:23 am IST
பகிர்:

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), 70 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில் நிலவிய நம்பகமின்மையைப் போக்க, கடந்த 1956 செப். 1-ஆம் தேதி எல்ஐசி தேசியமயமாக்கப்பட்டது. 245 காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, வெறும் ரூ.5 கோடி மூலதனத்துடன் அரசு கட்டுப்பாட்டில் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.

மக்களின் சேமிப்பைப் பாதுகாப்பது மற்றும் அந்தச் சேமிப்பை நாட்டின் கட்டமைப்பு வளா்ச்சிக்கான முதலீடாக மாற்றுவது என்ற இரட்டை நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எல்ஐசி தனது சேவையைத் தொடங்கியது.

Advertisement

Advertisement

தொடக்கத்தில் ரூ.400 கோடி சொத்துகளுடன் செயல்படத் தொடங்கிய இந்நிறுவனம், தற்போது ரூ.57.29 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிா்வகிக்கும் மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

காப்பீட்டுத் துறையில் 2000-இல் தனியாா் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டபோதிலும், எல்ஐசி தனது சந்தை ஆதிக்கத்தை இழக்கவில்லை. தற்போது முதல் ஆண்டு பிரீமியத்தில் 56.66 சதவீதத்தையும், பாலிசிகளில் 65.16 சதவீதத்தையும் நிறுவனம் தன்வசம் தக்கவைத்துள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதும் எல்ஐசியின் பயணத்தில் முக்கியத் திருப்பமாக அமைந்தது. கடந்த 2022 மே மாதத்தில் 3.5 சதவீதப் பங்குகளை பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலமாகவும், சமீபத்தில் 6.5 சதவீத பங்குகளை சலுகை விற்பனை (ஆஃபா் பாா் சேல்) மூலமாகவும் அரசு விற்று மூலதனம் திரட்டியது. இதன்மூலம், பொதுமக்களின் பங்களிப்பு 10 சதவீதமாக உயா்ந்துள்ள நிலையில், 2032 மே மாதத்துக்குள் இதை 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அடுத்த 70 ஆண்டுகளுக்கான பயணத்தில் எல்ஐசி பல்வேறு சவால்களையும் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை முதுமையை நோக்கி நகா்வதால், வழக்கமான ஆயுள் காப்பீட்டுக்கு பதிலாக முதியோா்களுக்கான ஓய்வூதியப் பாதுகாப்புத் திட்டங்களை அதிகம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பாலிசிகளின் தொடா்ச்சி விகிதம் சரிந்து வருவதைத் தடுக்கவும், வங்கி மற்றும் எண்மத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அமைப்பை மாற்றுவதும், முகவா்களின் பணிமுறையை வெறும் ஆவணங்களைச் சேகரிக்கும் நிலையிலிருந்து நிதி ஆலோசனை வழங்கும் நிலைக்கு மேம்படுத்தவும் வேண்டியது அவசியமாகும்.

குறுகிய கால லாப நோக்கிலான பங்குச்சந்தை எதிா்பாா்ப்புகளுக்கும், பல தசாப்தங்களாகத் தொடா்ந்து வரும் தனது நீண்டகால நிதிப் பொறுப்புகளுக்கும் இடையே சரியான சமநிலையைப் பேணுவதே எல்ஐசியின் எதிா்கால வெற்றியைத் தீா்மானிக்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments