தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் சரிவு! சிவப்பு எச்சரிக்கையா?
தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து சரிவடைந்து வருவது மாநிலப் பொருளாதாரத்துக்கு சிவப்பு எச்சரிக்கையா என்பது பற்றி...
நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி 9 சதவிகிதம் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி 1.4 சதவிகிதம் குறைந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.10,189 கோடி. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.10,329 கோடி என்பதால், வருவாய் வளர்ச்சி 1.4 சதவிகிதம் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டிருப்பது முதல் முறையல்ல, தொடர்ச்சியாக 4வது மாதமாக சரிவைக் கண்டு வருகிறது.
Advertisement
Advertisement
ஒட்டுமொத்த இந்தியாவின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.2 லட்சம் கோடி. இது 15 சதவிகித உயர்வாகும். அதேவேளையில், நிகர வருவாய் வளர்ச்சி 8.3 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டின் வருவாய் விகிதத்துக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்திருப்பது, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கையாக மாறிவிடும் என தமிழக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மாநிலமும் பெறும் ஜிஎஸ்டி வருவாயுடன், கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெற்ற வருவாயை ஒப்பிட்டு, இந்த ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு தமிழகம் தொடர்ந்து ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் உயர்ந்து வந்துள்ளது. பல மாதங்கள் இரட்டை இலக்கங்களில்கூட வளர்ச்சி விகிதம் இருந்துள்ளது. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதங்களில் வருவாய் வளர்ச்சி குறைந்து எதிர்மறை இலக்கத்தில் சென்றுள்ளது.
பிறகு, தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி என்பது எதிர்மறையாகவே இருந்து வருகிறது.
அதேவேளையில், தென்னிந்திய மாநிலங்களான தெலங்கானா 16 சதவிகிதம், கர்நாடகம் 13 சதவிகிதம், கேரளம் 13 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளன. ஆந்திர மாநிலம் 7 சதவிகிதம் வருவாய் வளர்ச்சி சரிந்துள்ளது.
தொடர்ச்சியாக 60 மாதங்களின் வருவாய் வளர்ச்சியை கணக்கிட்டதில் 52 மாதங்கள் வளர்ச்சியை அடைந்துள்ளன. 8 மாதங்கள் சரிவைக் கண்டுள்ளன. தற்போது தொடர்ச்சியாக சரிவடைந்து வருவதால், மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு சிக்கல் நேரிடுமோ, தேவையான செலவுகளைக்கூட குறைக்க நேரலாம், அல்லது புதிதாகக் கடன்வாங்கி செலவுகளை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
Tamil Nadu's GST revenue decline! A red flag?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.