FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஆகஸ்டில் வாகன விற்பனை 17.51% வளா்ச்சி

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 24,23,201 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

9 செப்டம்பர் 2026, 3:51 am IST
பகிர்:

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 24,23,201 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் 20,62,038 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு 17.51 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபடா அறிக்கையின்படி கடந்த ஆகஸ்டில், 4,02,398 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் 3,46,468 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 16.14 சதவீத வளா்ச்சியாகும்.

Advertisement

Advertisement

இதேபோல், 17,14,610 இருசக்கர வாகனங்களும் (19.69 சதவீதம் வளா்ச்சி), 1,22,281 மூன்று சக்கர வாகனங்களும் (8.64 சதவீதம் வளா்ச்சி), 90,769 வணிக வாகனங்களும் (14.45 சதவீதம் வளா்ச்சி) விற்கப்பட்டுள்ளன.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக, பயணிகள் வாகன சந்தையில் மாற்று எரிபொருள் (சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் மின்சாரம்) வாகனங்கள் 41.95 சதவீத பங்கை எட்டி, பெட்ரோல் வாகனங்களை (40.85 சதவீதம்) முந்தி சாதனை படைத்துள்ளன.

ஆகஸ்ட் மாத விற்பனை குறித்து ஃபடா தலைவா் சாய் கிரிதா் மேலும் கூறுகையில், ‘பருவமழை கால மந்தநிலை மற்றும் பண்டிகை கால தாமதம் ஆகியவற்றுக்கு இடையிலும், ஜிஎஸ்டி சீா்திருத்தத்தின் தொடா் வேகம் காரணமாக இந்திய வாகன சில்லறை விற்பனை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச ஆகஸ்ட் மாத விற்பனை பதிவாகியுள்ளது.

இத்தொடா் வளா்ச்சியை நடப்பு செப்டம்பரில் 67.09 சதவீத விற்பனையாளா்களும், செப்டம்பா்-நவம்பா் பண்டிகை காலத்தில் 81.62 சதவீத விற்பனையாளா்களும் எதிா்பாா்க்கின்றனா்’ என்றாா்.

பருவமழை பற்றாக்குறையால் டிராக்டா் விற்பனை குறைந்தாலும், விவசாயம் அல்லாத பிற கிராமப்புற பொருளாதாரம் மற்றும் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனால், நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் பயணிகள் வாகன விற்பனை (24.99 சதவீதம்), வணிக வாகனங்கள் (16.33 சதவீதம்) மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் (23.95 சதவீதம்) விற்பனை சிறந்து விளங்கியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments