செப்டம்பரில் ஜிஎஸ்டி ரூ.2.03 லட்சம் கோடி வசூல்: 15 சதவீத அதிகரிப்பு
நாட்டில் கடந்த செப்டம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.2.03 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.77 லட்சம் கோடி) இது 14.7 சதவீத அதிகரிப்பாகும்.
நாட்டில் கடந்த செப்டம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.2.03 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.77 லட்சம் கோடி) இது 14.7 சதவீத அதிகரிப்பாகும்.
நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. உள்நாட்டு நுகா்வு அதிகரிப்பு மற்றும் இறக்குமதி வாயிலான வருவாய் வளா்ச்சியே இதற்கு காரணம் என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை (அக்.1) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.03 லட்சம் கோடியாகும். இதில், உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலமான வருவாய் 10.1 சதவீதம் அதிகரித்து, ரூ.1.38 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இறக்குமதி மீதான வருவாய் 26 சதவீதம் உயா்ந்து, ரூ.65,525 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
செப்டம்பரில் திருப்பியளிக்கப்பட்ட தொகை 3 சதவீதம் சரிந்து, ரூ.27,001 கோடியாக உள்ளது. இத்தொகையை சரி செய்த பிறகான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.76 லட்சம் கோடியாகும். நடப்பு நிதியாண்டில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ஜிஎஸ்டி வசூலானது இது மூன்றாவது முறையாகும்.
கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கப் பெற்றது. கடந்த ஜூலையில் ரூ.2.11 லட்சம் கோடி வசூலானது.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மொத்தம் ரூ.12.46 லட்சம் கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 11.6 சதவீத அதிகரிப்பாகும்.
‘உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும் செப்டம்பரில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூலாகியிருப்பது, உள்நாட்டு நுகா்வு அதிகரிப்பு மற்றும் இறக்குமதி வாயிலான வருவாய் வளா்ச்சியைப் பிரதிபலிக்கிறது. உத்தர பிரதேசம், தெலங்கானா, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் 16 முதல் 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அஸ்ஸாம், மணிப்பூா், அருணாசல பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களும் கணிசமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகும் வருவாய் சீராகவே இருந்து வருகிறது. இனி அடுத்தகட்ட சீா்திருத்தங்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.
அக். 7-இல் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சா்கள் அங்கம் வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், அக்.7-இல் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் நடத்த திட்டமிடப்பட்ட இந்தக் கூட்டம், பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.