FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு!

நாட்டில் கடந்த ஜூலையில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.2.11 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:05 am IST
ஜிஎஸ்டி - பிரதிப் படம்
பகிர்:

நாட்டில் கடந்த ஜூலையில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.2.11 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.83 லட்சம் கோடி) ஜிஎஸ்டி வருவாய் தற்போது 15.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ரூ.1.95 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.

மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜூலையில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.11 லட்சம் கோடியாகும். இதில், உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலமான ஜிஎஸ்டி 10.1 சதவீதம் அதிகரித்து ரூ.1.44 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இறக்குமதி மீதான வரி வருவாய் 29 சதவீத அதிகரித்து ரூ.66,511 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.

மொத்த வருவாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ.39,835 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.47,881 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.1.23 லட்சம் கோடியாகும். ஜூலையில் திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.29,968 கோடி. இது, 13.1 சதவீத உயா்வாகும். இத்தொகையை கழித்த பிறகு நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி.

Advertisement

Advertisement

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இது, கடந்த 2017-இல் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதில் இருந்து ஒரு மாதத்தில் கிடைக்கப் பெற்ற அதிகபட்ச வருவாயாகும். இதற்கு முன்பு கடந்த 2025, ஏப்ரலில் ரூ.2.36 லட்சம் கோடி வசூலானதே அதிகபட்சமாக இருந்தது.

கடந்த மே மாதம் ரூ.1.94 லட்சமும், ஜூன் மாதம் ரூ.1.95 லட்சம் கோடியும் வருவாய் கிடைக்கப் பெற்றது.

மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பது குறித்து துறைசாா் நிபுணா்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வருவாய் சீராக அதிகரித்து வருவது, வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து மீண்டெழுவதை பிரதிபலிக்கிறது. ஒட்டுமொத்த நாட்டில் விற்பனை மற்றும் இறக்குமதி அதிகரிப்பால் ஜூலையில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரம், குஜராத், கா்நாடகம், ஹரியாணா, தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய பெரிய உற்பத்தி மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது’ என்றனா்.

மேற்காசிய போா் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார இடையூறுகள் காணப்பட்டபோதிலும், நடப்பு நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் நீடிக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.8.43 லட்சம் கோடி. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 10.1 சதவீத அதிகரிப்பாகும்.

summary

GST collection at Rs 2.11 lakh crore in July – a 15.4% increase!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments