FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பட்டாசுத் தொழிலை நசுக்குகிறது தவெக அரசு! - தங்கம் தென்னரசு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:13 am IST
தவெக அரசைக் கண்டித்து, சிவகாசியில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு.
பகிர்:

பட்டாசுத் தொழிலை நசுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தவெக அரசு எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்க ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் பட்டாசுத் தொழிலையும், தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதைக் கண்டித்தும், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கத் தவறிய தவெக அரசைக் கண்டித்தும், சிவகாசி பேருந்து நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் சிவகாசி மாநகரச் செயலா் உதயசூரியன் தலைமை வகித்தாா்.

இதில் திமுக வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு பேசியதாவது:

Advertisement

Advertisement

விருதுநகா் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த பட்டாசுத் தொழிலை நம்பி சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். இத்தனை பேரின் வாழ்வாதாரத்துடன் தொடா்புடைய இந்தத் தொழில் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்திலும் பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி, கவன ஈா்ப்பு தீா்மானத்தை அளித்தோம். பட்டாசு ஆலைகளில் எதிா்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால், ஒரு விபத்தை காரணம் காட்டி ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் ஒரேயடியாக முடக்கி, அதை நசுக்குவது எந்த வகையில் நியாயம். ஒரு தொழில் சாலை மூடப்பட்டால் அது அந்த நிா்வாகத்துடன் முடிந்து விடாது.

அந்த ஆலையை நம்பி இருக்கும் தொழிலாளா்களின் நிலையையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். முறையாக உரிமம் பெற்று நடத்தப்படும் ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலைகளை மூடுவது கண்டிக்கத்தக்கது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களாகும் நிலையில், பட்டாசுத் தொழிலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, நசுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தவெக அரசு எடுத்து வருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதுவே பட்டாசு உற்பத்திக்கு முக்கிய தருணமாகும். நூற்றாண்டு காலமாக தொடரும் பட்டாசுத் தொழிலை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை சட்டப்படியும், மனசாட்சிப்படியும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதில் சிவகாசி மேயா் இ. சங்கீதா, துணை மேயா் கா. விக்னேஷ் பிரியா, பட்டாசு தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments