FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!

பணி வாய்ப்புகளில் மட்டுமல்லாமல் தற்போது தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கிறது செய்யறிவு

15 வினாடிகள் முன்பு
தேர்வு - பிரதி படம் - ENS
பகிர்:

தென்கொரியாவில், நடைபெற்ற எழுத்துத் தேர்வில் பங்கேற்ற மாணவர் ஒருவர், செய்யறிவால் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்து வந்து தேர்வெழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தால், அந்நாட்டின் தேசிய தேர்வு அமைப்பானது, செய்யறிவால் இயங்கும் கண்ணாடிகளை அணிந்து வரும் மாணவர்களை கண்டறிவது எப்படி என்பது குறித்து சிந்தித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

இதுநாள்வரை, வேலை வாய்ப்புகளைத்தான் செய்யறிவு பறித்து வந்தது. இனி, தேர்வுகளைக்கூட முழுக்க முழுக்க நியாயமான முறையில் நடத்த முடியாமல் போகலாம் என்றே இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது.

தென்கொரிய பிரதமர், கல்வித் துறை அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில், செய்யறிவால் இயங்கும் கண்ணாடிகளைக் கண்டுபிடிப்பது, செய்யறிவைப் பயன்படுத்தி, மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடு செய்தால் கண்டுபிடிக்கும் முறைகளை அறிமுகப்படுத்துவது போன்ற பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள்.

நம்ம ஊர் சிஏ தேர்வு போல, தென் கொரியாவில் நடைபெற்ற பல நூறு கேள்விகளைக் கொண்ட இரு வேறு தனித்தனி தேர்வுகளில், ஒரு மாணவர் கிட்டத்தட்ட முழு மதிப்பெண்கள் எடுத்தது பேராசிரியர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.

மாணவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர், கண்ணுக்குப் புலப்படாத கேமராவுடன் இணைந்து செயல்படும் செய்யறிவு ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்து தேர்வெழுதியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த கேமரா மூலம் கேள்வி ஒவ்வொன்றும் புகைப்படமாக எடுக்கப்பட்ட செய்யறிவு கருவிக்கு அனுப்பப்படும். அங்கிருந்து கண்ணாடி வழியாகவே எனக்கு பதில்கள் வந்துவிடும். இதற்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது என்றும் மாணவர் விவரித்துள்ளார்.

மாணவரின் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டு, அவர் தேசிய தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி நான் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டேன், எனது முழு மதிப்பெண்ணும், மோசடியால் பெறப்பட்டது என்று தானே வாக்குமூலம் கொடுக்கும் விடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலையில் நடந்த இரு வேறு தேர்வுகளிலும் மாணவர் முழு மதிப்பெண் எடுத்திருந்தார். இதுதான் சந்தேகத்துக்கு அடிப்படையாக இருந்தது.

தேர்வில் மாணவர்கள் மோசடி செய்வது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்க முடியாத வகையில், கண்ணாடி ஃபிரேம்களில்கூட கேமராக்களை இணைத்துவிட முடியும் என்றும் கூறப்படுகிறது. சியோலில், கடந்த மாதம், பல்கலை தேர்வின்போது செய்யறிவு கண்ணாடி அணிந்து வந்த மாணவர் ஒருவர் பிடிபட்டிருந்தார்.

மேலும் மருத்துவ நுழைவுத் தேர்விலும் இதுபோன்று ஒரு மாணவர் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தொடர்ந்த இந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பது தேர்வு அமைப்புகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

summary

AI is meddling not just in jobs, but in exams too—cheating via smart glasses!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.