FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

சிறுகதை: கனவு பொய்ப்பட வேண்டும்

அன்று விடியற்காலை ஒரு கனவு கண்டேன். அது உறக்கத்திலா அல்லது இல்லையா என்று சொல்ல முடியாத ஒரு இரண்டுங்கெட்டான் நிலை. முதுகு முழுவதும் பசபசவென்று வியர்த்திருந்தது. சில்வண்டுகளின் "கிர்' ஓசை ஒலித்துக்கொண்ட

Updated On : 20 செப்டம்பர் 2012, 7:13 pm IST
பகிர்:

அன்று விடியற்காலை ஒரு கனவு கண்டேன். அது உறக்கத்திலா அல்லது இல்லையா என்று சொல்ல முடியாத ஒரு இரண்டுங்கெட்டான் நிலை. முதுகு முழுவதும் பசபசவென்று வியர்த்திருந்தது. சில்வண்டுகளின் "கிர்' ஓசை ஒலித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ நாய் ஒன்று வெகு நேரமாய்க் குரைத்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அது கனவுதான். என்னால் தாங்க இயலாத அளவு அவஸ்தையின் வரம்பில்தான் அந்தக் கனவு கண்டேன். கனவின் நிகழ்ச்சி இதுதான்.

ஒரு நாள் மதியம் நான் தோட்டத்தில் கிணற்றடிக்குப் பக்கத்தில் துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். தூரத்தில் பக்கத்து வீட்டு சேஷன் என்கிற சேஷகிரிராவ் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறான். தோட்டத்தில் வேலையாள் ஒருவன் புல் வெட்டிக் கொண்டிருக்கிறான். நான் புத்தகத்திலிருந்து விலகி சுற்றிலும் நோட்டம் விடுகிறேன். அப்போதுதான் அந்த வேப்பமரக் கிளையின் மத்தியில் அந்த அதிசயமான விகார பறவையைப் பார்க்கிறேன்.

அது தன் சிவப்புக் கண்களை உருட்டி விழிக்கிறது. அதன் கழுத்து பாகம் சற்று பளபளப்பாக இருக்கிறது. உருவத்தில் சற்று சிறிய பறவைதான் என்றாலும் அதன் கூரிய மூக்கின் ஆதார அழுத்தம் என்னை வியக்க வைக்கிறது. அது தன்  இறக்கைகளைச் சற்று படபடத்துவிட்டு "ஹவ்' "ஹவ்' என்று அபத்தமாக குரல்  எழுப்புகிறது.

ஐந்து நிமிடங்களில் நான் வியக்கத் தக்க அளவில் அந்த வேப்ப மரக்கிளைகளில்  அந்த அதிசய பறவையின்  ஆக்கிரமிப்பு அதிகமாகின்றது. பின் சட்டென்று அந்த மரக்கிளையிலிருந்து  அந்தப் பறவை ஜிவ்வென்று கிளம்பி கண்ணிமைக்கும் நேரத்தில் கிணற்றடியில் நீர் இறைத்துக்கொண்டிருந்த சேஷனின் மார்பைக் குறிவைத்து பறந்து சென்று அவன் குரல்வளையைத் தன் பலமான மூக்கால் குத்த, அவன் ""ஹோ'' என்ற இரைச்சலுடன் தொண்டைப் பகுதியிலிருந்து ரத்தம் குபுகுபுவென்று, கிளம்ப, தள்ளாடி விழுகிறான். மற்ற பறவைகள் உற்சாகக் குரல் எழுப்பிக்கொண்டு அவனை நோக்கிப் பறந்து சென்று தங்கள் பங்குக்கு அவனைத் துவம்சம் செய்கின்றன. நான் என்ன நேர்ந்தது என்பதை ஊகிக்கும் முன்பே சேஷன் முகத்தில் கண்கள், உதடு, தொண்டை எனப் பல உறுப்புகள் இழந்து துடிப்பு அடங்கிக் கொண்டிருந்தான். தூரத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்த வேலையாள் கையில் கத்தரிக்கோலுடன் சேஷனுக்கு உதவி செய்ய ஓடி வந்த பறவைகளை நோக்கி ""சூ...சூ'' என்று விரட்ட அவைகளின் ஒட்டுமொத்த கவனம் முழுவதும் அவன்மேல் திரும்ப...'' - மேலும் ஒரு கொலையைக் காண சகியாது நான் விழித்துக் கொண்டேன். இது ஒரு சாதாரணக் கனவுதான் என்று ஒதுக்கித் தள்ள என்னால் முடியவில்லை. காரணம் கனவுகள் என்பது எனக்கு மிக அரிது. எனவே அன்று மாலை ஒரு சைக்கியாட்ரிஸ்டைச் சந்திக்கவும் அவர் ஆலோசனை பெறவும் புறப்பட்டேன். டாக்டர் என்னுடைய கனவு நிகழ்ச்சியைக் கூர்மையாகக் கேட்டார்.

""ஐ..ஸீ'' என்று சொல்லிவிட்டு சற்று நேரம் யோசித்தார்.

""மிஸ்டர்....''

""சரவணன்...'' என்றேன் நான்.

""யெஸ்... மிஸ்டர் சரவணன். கனவு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இதுபோன்ற கனவுகள் எனக்கு வந்தால் நான் "ஹிட்ச்ஹாக்', "விட்டாலாச்சார்யா' படங்களுக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்படாது... இல்லையா?''

""இல்லை... டாக்டர்... ஐ திங்க் சம்திங் சீரியஸ் பிகைன்ட் திஸ் டைப் ஆப் ட்ரீம்ஸ்''

""நிச்சயமாக இல்லை, மிஸ்டர் சரவணன்'' என்ற டாக்டர் நான் எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்கிறேன், எந்த வகையான திரைப்படங்கள் பார்க்கிறேன் என்ற வழக்கமான கேள்விகள் கேட்டுவிட்டு தீவிரமாக உடற்பயிற்சி செய்யவும், இரவில் தொல்லை தராத உணவு வகைகளை உட்கொள்ளுமாறும், முடிந்தால் இரவு படுக்கப் போகுமுன் சற்றுநேரம் தியானம் செய்யவும் அறிவுறுத்தினார்.

நான் டாக்டரிடமிருந்து கிளம்பும்முன் அவரிடம்,""நீங்கள் நினைப்பதுபோல் இது ஒரு சாதாரண கனவு என்று எனக்குத் தோன்றவில்லை டாக்டர். காரணம் இதே மாதிரி நான் இதற்குமுன் கண்ட இரண்டு கனவுகள் எதிர்பாராத வகையில் முழுமையாகப் பலித்திருக்கிறது. ஒன்று அதிகம் முக்கியமில்லாதது. இரண்டாவது, நான் நான்கு மாதங்கள் முன்பு இதே போன்று விடியற்காலை நேரத்தில் கனவில் வெüவால் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பது போன்றும், அதை விரட்ட அதனருகில் செல்லும்போது அதன் முகம் உள்ளூரில்  இருக்கும் என்னுடைய கஸின் ஒருவரது முகத்தைப் போன்று இருப்பதை உணர்ந்தேன். பின்பு அந்த வெüவாலை நான் தொட்டபோது அது இறந்துவிட்டதில் மாட்டிக் கொண்டு இருந்ததுபோல் தோன்றியது. ஆறு முழு நாட்கள் - நான் கனவில் கண்ட அதே கஸின் மூன்றாவது மாடியில் டி.வி.ஆண்டெனாவைச் சரி செய்ய மாடிச் சுவர் ஏறியவர் தவறி மின் சப்ளை கம்பியைத் தொட்டுவிட அங்கிருந்து தூக்கி எறியப்பட்டு இறந்துபோனார்.

 இதில் மேலும் ஓர் அதிசயத்தக்க விஷயம் என்னவென்றால், ஷாக் அடித்து இறந்துபோன என் கஸினின் உடல் தரைக்கு வரவேயில்லை. "சன்ஷேட்' ஒன்றில் அவரது உடை மாட்டிக்கொண்டு, "வெüவால்' போன்று தொங்கிக்கொண்டிருந்தது அவரது உடல். இதை எந்த வகையில் சேர்க்கிறீர்

கள் டாக்டர்? சின்னக் குழந்தை போல் பேய்க் கனவு கண்டுவிட்டு பயந்து உங்களிடம் ஓடிவரவில்லை டாக்டர்... குட்பை...'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன். டாக்டர் வியர்த்திருந்தார்.

மறுநாள் நான் சேஷனைப் பார்க்கும்போது எனக்குச் சங்கடமாக இருந்தது. சேஷனுக்குச் சிறிய வயதுதான். காது சற்று மந்தம். மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒண்டுக் குடித்தனம் ஒன்றில் வாழும் மத்திய வர்க்கத்தினன். சமீபத்தில்தான் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவன். தமிழ் அதிகம் தெரியாது. அவன் பேசும் கன்னடத்தை நான் புரிந்துகொள்வதுபோல், நான் பேசும் தமிழையும் அவன் புரிந்துகொள்வான். நான் அவனைச் சந்தித்து என்ன சொல்வேன்?

""பட்சி ஒன்று வரப்போகிறது தோழா - உன்னைக் கொல்ல - உஷார்'' என்று எச்சரிக்கை செய்யவா? அல்லது, ""வீட்டின் உள்ளேயே முடங்கிக் கொண்டு உன்னைக் காப்பாற்றிக் கொள்'' என்று அறிவுரை சொல்லவா? இப்படிச் செய்தால் உலகம் என்னைப் பைத்தியக்காரன் என்று ஒதுக்கித் தள்ளும். பின்பு அந்த நிகழ்ச்சி நடந்தபின்பு, "தெய்வீகச்சக்தி' என்று சொல்லி என்னைச் சாமியாராக்கி விடும். இதை நான் விரும்பவில்லை. அப்படியானால் சேஷன் இறக்க வேண்டியதுதானா? அல்லது அவனை என்னால் காப்பாற்ற முடியுமா?

சேஷனைச் சந்தித்து அவனை மறைமுகமாக எச்சரிக்கை செய்தேன். ""சேஷன்! அவசியம் ஏற்பட்டாலொழிய தனிமையாக எங்கும் செல்வதைத் தவிர்த்துவிடு. குறிப்பாக தோட்டத்துக்கு ஆயுதம் எதுவுமின்றி செல்லாதே'' என்று நான் சொன்னவுடன் சேஷன் ஏளனமாகச் சிரித்தான்.

""ஏசுப்பா நினே நன்ன பிராணக்க ஹானி தருவி தோரத்தல்லா. நானு பூஜிசுவா தேவரு நன்ன காயுதித்தானே. சிந்த்தேபிடு'' என்றான்.

நான் அத்தோடு விட்டுவிட்டு வந்துவிட்டேன். என்னால் முடிந்தது அவ்வளவுதான். இருந்தாலும் சேஷனுக்கு ஆபத்து ஏற்படுவது போன்ற சூழ்நிலை ஏற்படுமானால் அதைத் தடுக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.

மூன்று நாட்கள் சென்ற பின்பு விடுமுறை நாள் ஒன்றின் மந்தமான மதியத்தில் நான் மேல் மாடியில் அமர்ந்து சிறுவர்மணியில்  வந்த குறுக்கெழுத்துப் புதிரில் ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். கனவின் தீவிரம் சற்று அடங்கி, மறந்து போயிருந்தது.

""பனிப்பிரதேசத்தில் வாழும் ஒரு கொடிய பறவை...'' என்று குறுக்கெழுத்துப்  புதிரிப் பகுதியில் பார்த்ததும் நான் சட்டென்று விதிர்த்து எழுந்து தோட்டத்தை நோக்கினேன்.

 சேஷன் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தான் வேலையாள் ஒருவன். தூரத்தில் புல்வெட்டிக் கொண்டிருந்தான். நான் வேப்பமரத்தை நோக்கினேன். அதுதான் - அதே பறவைதான். தன் சிவப்புக் கண்களால் உருட்டி விழித்துக் கொண்டிருந்தது. அதிர்ச்சியின் உச்சத்தில் நான் "சேஷன்' என்று கத்திக்கொண்டே மாடிக் கைப்பிடிச் சுவற்றின் மீது ஏறிநின்றுகொண்டு, ""ஜாக்கிரதை சேஷன்... உடனே உள்ளே போய்விடு.... அவசரம்'' என்று கத்திய வேகத்தில்  தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்தப் பறவை அலறியடித்துக் கொண்டு என் தலைக்கு மேலே படுவேகமாகப் பறந்து போனது. ●

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments