திரைக் கதிர்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் "அத்திரண்டிகி தாரேதி'. கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான படங்களில் வசூல் ரீதியாக சாதனை
• கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் "அத்திரண்டிகி தாரேதி'. கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான படங்களில் வசூல் ரீதியாக சாதனை புரிந்த படம் இது என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி த்ரிவிக்ரம் இயக்கியிருந்த இப்படத்தில் பவன்கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்டோர் நடித்தனர். ஆந்திர அரசின் 4 "நந்தி' விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும், ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளும் நடந்து வந்தன. தற்போது இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது லைகா நிறுவனம். இதில் கதாநாயகன் மற்றும் இயக்குநர் யார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
• காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஜுலை காற்றில்...'. அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் கே. சி. சுந்தரம். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர்.
ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைப்பில், டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அனுசரண் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஜெயக்குமார் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். கபிலன் வைரமுத்து, ரோஹிணி மற்றும் செüந்தரராஜன் ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். விஷ்வகிரண் நம்பி, ஸ்ரீசெல்வி இருவரும் நடன இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். சென்னை, கோத்தகிரி, இலங்கை மற்றும் போர்க்சுகல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படவுள்ளது.
• "தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் தமிழில் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக என்ஜிகே படத்திலும், ஹிந்தியில் அஜய்தேவ்கன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க உள்ளார். தெலுங்கிலும் பரபரப்பாக இயங்கி வந்த ரகுலுக்கு தற்போது அங்கு ஒரு படமும் கையில் இல்லை. ஆனால் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் வந்து சேர்கின்ற போதிலும், அமைதியாக தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் ரகுல். இது பற்றி அவர் பேசும் போது... ""திருமணம் எப்போது என்பது என்ற கேள்விதான் என் முன்னால் பிரதானமாக வைக்கப்படுகிறது. தற்போது நடிப்பில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எனது வருங்கால கணவர் ஏழையாக இருந்தாலும் என்னிடம் மாறாத அன்பு காட்டுபவராகவும், நல்ல குணநலன்கள் கொண்டவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் எனது உயரம் 5.9அடி, எனக்கு கணவராக வருபவர் குறைந்தபட்சம் ஆறடி உயரம் இருக்க வேண்டும். இதை விட எனக்கு பெரிய கல்யாண இலக்குகள் இல்லை. திருமணம் என்பது எல்லோருக்கும் நடப்பது போன்று எனக்கும் நடக்கும். நடிகை என்பதால் அதை பெரிதுபடுத்துகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார் ரகுல்.
Advertisement
Advertisement
• நயன்தாராவுக்கென தமிழில் தனி மார்க்கெட் உருவாகி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நயன்தாராவுக்கென இயக்குநர்கள் தனியாக திரைக்கதை எழுதுவதும், தயாரிப்பாளர்கள் பெரும் தொகையை அவருக்காக செலவிட்டு படம் தயாரிக்க முன் வருவதும், இதற்கு முன் எந்த நடிகைக்கும் நடக்காத ஒன்று என்றே சொல்லப்படுகிறது. இந்த வரிசையில் நயன்தாரா நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் "கோலமாவு கோகிலா'. சுருக்கமாக இந்தப் படத்தை "கோகோ' என்று குறிப்பிடுகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், நயன்தாராவை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்கும் பெண்ணாக நயன்தாராவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அதேநாளில் கமல்ஹாசன் நடித்துள்ள "விஸ்வரூபம் 2' வெளியாகவுள்ளது. இதனால் அந்த நாளில் படத்தை வெளியிட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. நயன்தாராவும் இதையே விரும்பினார். இதனால் தற்போது ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
• தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வந்த டாப்ஸிக்கு ஒரு கட்டத்தில் பெரிய வாய்ப்புகள் எதுவுமில்லை. இதனால் பாலிவுட் சினிமா வாய்ப்புகளைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். நினைத்தபடியே அவருக்கு அங்கு திருப்திகரமான வாய்ப்புகள் அமைந்தன. ஒரு சில ஹிட் படங்கள் மூலம் பாலிவுட்டில் டாப்ஸியின் பெயர் பெரிய அளவில் அடிபட்டது. இதனால் அந்த மார்க்கெட்டை இங்கே பயன்படுத்த நினைத்த இயக்குநர்கள் டாப்ஸிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தமிழில் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார். தற்போது டாப்ஸியின் காதல் கதை பற்றி சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் நெருக்கமாக அவர் பழகி வந்தார். இந்நிலையில் டாப்ஸிக்கும், மேதிஸýக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவிவருகிறது. சமீபத்தில் தன் குடும்பத்தாருடன் கோவா சென்றார் டாப்ஸி. அங்கு மேதிஸýம் வந்திருந்தார். எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. கையில் இருக்கும் படங்களை முடித்த பின்னர் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜி.அசோக்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.