திரைப்படத் திறனாய்வுக்கு அறந்தை!
தமிழ்த் திரைப்படங்களின் ஆரம்ப நிலையை, பேசாத படங்கள் தொடங்கி பேசும் படங்களாக மாற்றம் பெற்றது வரையில் ஓர் ஆழமான பார்வையோடு ஆராய்ச்சிக் கூறுகளோடு தெரிந்துகொள்ள ஏதேனும்...
காசாவயல் கண்ணன்
தமிழ்த் திரைப்படங்களின் ஆரம்ப நிலையை, பேசாத படங்கள் தொடங்கி பேசும் படங்களாக மாற்றம் பெற்றது வரையில் ஓர் ஆழமான பார்வையோடு ஆராய்ச்சிக் கூறுகளோடு தெரிந்துகொள்ள ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என்றால், அறந்தையைத் தவிர வேறு யாரையும் நாம் வாசிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
சென்னை வடபழனியில் 1960-களில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் ஜீவா அவர்கள் கலந்துகொண்டார். ஓர் இளைஞன் உணர்ச்சியோடும் எழுச்சியோடும் மேடையில் முழங்கினான்.
Advertisement
ஜீவா அந்த இளைஞனை முதுகில் தட்டிக்கொடுத்து, 'நீ இருக்க வேண்டிய இடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி' என்று புகழாரம் சூட்டினார்.
தோழர் ஜீவாவின் அழைப்பை ஏற்று, தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டு இறுதிவரை பொதுவுடமை கொள்கையோடு வாழ்ந்தவர்தான் எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட ஆய்வாளர் அறந்தை நாராயணன்.
உண்ணாவிரதப் போராட்டம்
அறந்தாங்கி வட்டத்தில் சிறுகாசாவயல் எனும் குட்டிக் கிராமத்தில் 1940-இல் பிறந்தவர் அறந்தை நாராயணன். அறந்தாங்கியில் பள்ளி இறுதி வகுப்பு படித்தார். தேவிகுளம், பீர்மேடு, திருத்தணி பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்ற போராட்டம் உச்ச நிலையில் இருந்தபோது, இவர் அறந்தாங்கியில் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றவேண்டி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தபோது இவரும் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
பள்ளியிறுதி வகுப்பை முடித்ததும் தன் அண்ணன் ஆசிரியர் காசாவயல் மணியின் ஏற்பாட்டில் ஆசிரியர் பணி கிடைத்தது. ஆனாலும், ஒரு போராட்டக் குணமுள்ள இளைஞனால் வகுப்பறைக்குள் அடைந்து கிடக்க இயலவில்லை. காசாவயலில் செங்கொடியை ஏற்றிவைத்த திருப்தியோடு சென்னைக்கு ரயிலேறினார்.
பொதுவுடைமைத் தோழர்களோடு நெருக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழான 'ஜனசக்தி'யில் பிழைதிருத்தும் வேலையில் ஈடுபட்டார். அங்கு வந்த பொதுவுடைமைத் தோழர்கள் ஜீவா, பாலதண்டாயுதம் போன்றவர்களிடம் தன் அரசியல் அறிவை பட்டைதீட்டிக்கொண்டதால் அறந்தைக்கு 'ஜனசக்தி' ஆசிரியர் குழுவில் இடம் கிடைத்தது.
பேச்சாலேயே இயக்கம் வளர்த்த திராவிட இயக்கத் தோழர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பொதுவுடைமை மேடைகளில் புது உத்திகளைக் கையாண்டு திரண்டிருந்த கூட்டத்தைக் கட்டிப்போடுவார் அறந்தை. 'மேடையில் பேசலாம் வாங்க' என்பது இவர் எழுதிய நூல்.
அரங்கத்தை மிரளச்செய்வார்
அன்றைய காலகட்டத்தில் மார்க்சியக் கருத்துகளை ஆராய்ந்து ஆதரித்து மேடைகளில் பேசிவந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறந்தையின் பேச்சில் பிரமித்து அவரை தனது பட்டிமன்றங்களில் தொடர்ந்து பங்குபெறச்செய்வார்.
'காந்தியமா மார்க்சியமா' எனும் தலைப்பில் அறந்தை அரங்கத்தை மிரளச்செய்வார் என அறந்தையோடு மேடையேறிய சமகால பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் அ.வ.ராஜகோபாலன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் அறந்தையுடன் மிகுந்த நட்போடு பழகிவந்த காரணத்தால் 'கல்பனா' என்ற இதழை இருவரும் இணைந்து நடத்தி வந்தனர்.
'சுதந்திரப்போரில் தமிழ் சினிமா', 'திராவிடம் பாடிய திரைப்படங்கள்' போன்றவை இவர் தினமணி கதிரில் எழுதிய தொடர்கள். இக்கட்டுரைகள் அனைத்தும் 'தமிழ் சினிமாவின் கதை' என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி வெளியீடாக வந்தது.
குடியரசுத் தலைவர் விருது
இந்தியத் திரைப்படத் துறையின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவின் போது, 1981-ஆம் ஆண்டில் ஆங்கிலத்திலும் இதர இந்திய மொழிகளிலும் வெளிவந்த அனைத்து நூல்களிலும் 'தமிழ் சினிமாவின் கதை' என்ற நூல் சிறந்தது என்று திரைப்பட வளர்ச்சிக் குழுமத்தால் தேர்வு செய்யப்பட்டு அறந்தை நாராயணனுக்கு ஜனாதிபதி விருது அன்றைய குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவரெட்டியால் வழங்கப்பட்டது.
இவரின் 'சுதந்திரப்போரின் தமிழ் சினிமா' எனும் நூல் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறையின் 1988-ஆம் ஆண்டுக்கான முதல் பரிசை வென்றது. விருதினை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி வழங்கினார். அறந்தையின் கலைப்பணியைப் பாராட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இவருக்கு 1991 ஆம் ஆண்டு 'கலைமாமணி விருது' வழங்கிச் சிறப்பித்தது.
பட்டுக்கோட்டையை எழுதிய அறந்தை
'பொதுவுடைமை பாட்டுக்காரன்' மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரலாற்றை எழுத்தாளர் அறந்தை நாராயணனை எழுதச்சொல்லி சாகித்திய அகாதெமி வெளியிட்டது.
இந்த நூலை வாசிக்க வாசிக்க பட்டுக்கோட்டையின் வரலாறும், இடதுசாரி இயக்கங்களின் வரலாறும் நம் கண் முன்னே விரிகின்றது. தஞ்சைப்பகுதியில் இடதுசாரி இயக்கங்கள் வளர்ந்ததற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டைக்கும் இடதுசாரி இயக்கங்களுக்குமான தொடர்பை மிக நெருக்கமாக உணரச் செய்கின்றார். பெரும் உழைப்பைக் கொடுத்தே அறந்தை இந்த நூலை எழுதியிருக்கின்றார்.
அறந்தை நாராயணனின் 'கல்பனா' இதழில் கட்டுரைகள் எழுதி வந்த யமுனா ராஜேந்திரன், தனது முகநூல் பக்கத்தில், 'திரைத்துறையில் எக்ஸ்ட்ரா நடிக நடிகையரின் யூனியனை அறந்தை கட்டினார். அந்த அனுபவத்தில் 'ஜக்கா' நாவலை எழுதினார். இத்தாலிய நாவலாசிரியர் ஆல்பர்ட்டோ மொராவியோ போல வர்ணனைகளைக் கொண்டது 'ஜக்கா' நாவல்' என்று குறிப்பிட்டுள்ளார்.
'டூப்' என்ற நாவலில் திரையில் விசில்பறக்கக் கொண்டாடப்படும் கதாநாயகர்களுக்காக உடல் உழைப்பால் அவதிப்படும் 'டூப்' கலைஞர்களைப்பற்றி எழுதியிருக்கிறார். 'காதலுக்காக', 'குளிர் இரவில் நெருப்பு மலர்', 'விடுதலைப்போர் வீராங்களை கல்பனா', 'பகத்சிங்கும் அவனது தோழர்களும்' போன்ற நூல்கள் நியூசெஞ்சுரி வெளியீடாக வெளிவந்துள்ளன. 'இன்குலாப் ஜிந்தாபாத்', 'மூர் மார்க்கெட்' போன்ற நாடகங்களை எழுதி இயக்கி தானே நடித்தும் உள்ளார் அறந்தை.
தகவல் சுரங்கம்
பழந்தமிழ் இலக்கியத்துக்கு உ.வே.சா, தற்கால இலக்கியத்துக்கு வல்லிக்கண்ணன் ஆகியோர் தகவல் களஞ்சியங்கள். அதுபோலவே திரைத்துறை, நாடகத்துறை இரண்டுக்கும் தகவல் சுரங்கமாக இருந்தவர் 'அறந்தை' என்று, பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் 'இலக்கிய முன்னோடிகள்' எனும் தனது தொகுப்பில் அறந்தையைப் பற்றி எழுதியிருக்கின்றார்.
தன் படைப்புகளுக்காக குடியரசுத் தலைவர் விருது, சோவியத் நாட்டின் நெரு விருது, தமிழ் வளர்ச்சி இயக்குநகர விருது, கலைமாமணி விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற அறந்தை நாராயணன் இப்போது நம்மிடையே இல்லை. அவரது நினைவுநாள் அனுசரிக்கப்படுகின்ற இவ்வேளையில் திரைப்படத்துறை, நாடகத்துறை சார்ந்த ஆராய்ச்சி நூல்களைப் படைத்துள்ள அறந்தையின் படைப்புகளை தமிழக அரசு அரசுடைமையாக்கி, அவரது படைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி, காலந்தோறும் அறந்தையின் படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்தும் வகையில் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே இலக்கிய ஆர்வலர்களின் அவாவாக இருக்கின்றது.