முகப்பு
தினமணி கதிர்

உயிர் இயற்பியலில் ஒரு தடம்

இன்றைக்கு மூலக்கூறு மாதிரியாக்கத் துறை அதிவேகமாக வளர்ந்து வரும் துறையாகும்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 4:16 AM
பகிர்:

இன்றைக்கு மூலக்கூறு மாதிரியாக்கத் துறை அதிவேகமாக வளர்ந்து வரும் துறையாகும். இதன் அசுரவேக வளர்ச்சிக்கு குவாண்டம் கணினி, சூப்பர் கணினி, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பப் புரட்சி உந்து சக்திகளாக உள்ளன. ஆனால், உண்மையில், மூலக்கூறு மாதிரியாக்கத் துறைக்கான அடித்தளத்தில் பெரும்பகுதியை அமைத்தவர் தென்னிந்திய அறிஞர், தமிழகத்தைச் சேர்ந்த ஜி. என். ராமச்சந்திரன் (கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன்) என்பது பெருமைக்குரியது.

நாடு விடுதலைபெறும் காலத்திலேயே பல அறிஞர்கள் ஆய்வில் ஆர்வம் கொண்டு, ஆய்வு வசதிகளைப் புதிதாக இங்கேயே உருவாக்கிச் சாதித்துக் காட்டியுள்ளனர். அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டுக்குப் புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், இந்தியர்களின் அறிவுத் திறனையும் பறைசாற்றுவனவாக உள்ளன.

நவீன கணிப்பொறிகள் ஏதும் இல்லாத காலத்தில், அன்றைய மின்சார டெஸ்க்டாப் கால்குலேட்டர் கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டு, மிகவும் சிக்கலான புரதத்தின் வடிவமைப்புக்கு விளக்கம் தந்தார். அவர் விவரித்த வரைபடம், உயிர் மூலக்கூறுகளில் முக்கியமான ஒன்றான புரதக் கட்டமைப்புகளைச் சரிபார்ப்பதற்கான மிக எளிமையான, மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் விவரிப்பானாகவும், கருவியாகவும் இன்றுவரை விளங்குகிறது.

Advertisement

1922 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி ராமச்சந்திரன் பிறந்தார். தனது பள்ளி, இடைநிலைப் படிப்பை எர்ணாகுளத்திலும், இளங்கலை அறிவியல் படிப்பை திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியிலும் பயின்று, சென்னைப் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்தார். பின்னர், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் மின் பொறியியல் துறையில் சேர்ந்து, சி. வி. ராமன் மீது கொண்ட ஆர்வத்தால், இறுதியில் இயற்பியல் துறைக்கே மாறினார்.

பல்வகை ஊடகங்களின் ஒளியியல்' என்ற தலைப்பிலான தனது ஆய்வறிக்கைக்காக, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து தனது ஆராய்ச்சி வழி முதுகலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜில் உள்ள கேவென்டிஷ் ஆய்வகத்தில் எக்ஸ் கதிர் படிகவியலில் ஆய்வு மேற்கொண்ட உலகின் முன்னணி விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி, 1949இல் முனைவர் பட்டம் பெற்றார். தாயகம் திரும்பி, இந்திய அறிவியல் கழகத்தின் இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

அங்கு சில பேராசிரியர்களுடன் இணைந்து எக்ஸ் கதிர் படிகவியல் ஆய்வகம் ஒன்றை நிறுவினார். இது இந்தியப் படிகவியல் ஆராய்ச்சியின் பெரும்பகுதிக்கு ஒரு மையமாக விளங்கியது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் அழைப்பை ஏற்று, சி.வி. ராமன் வழிகாட்டுதலில் 1952ஆம் ஆண்டில், ராமச்சந்திரன் தனது 29ஆவது வயதிலேயே சென்னைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் நிறுவனத் தலைவராகவும், முழுநேரப் பேராசிரியராகவும் பொறுப்பேற்றார். சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஓர் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார்.

உயிர் இயற்பியல் மற்றும் படிகவியல் துறைகளுக்கு ராமச்சந்திரன் ஆற்றிய பெரும்பாலான முக்கியப் பங்களிப்புகள் சென்னையில் பணியாற்றிய அக்காலகட்டத்தில்தான் உருவாயின.

கொலாஜன் என்பது தோல் மற்றும் பிற இணைப்பு திசுக்களின் ஒட்டுமொத்த உருவாக்கத்துக்குக் காரணமான புரதமாகும். கொலாஜனின் அமைப்பு அக்காலத்தில் ஒரு பெரிய தீர்க்கப்படாமல் இருந்தது.

ராமச்சந்திரன் கொலாஜனின் இழை விளிம்புப் படத்தை எடுத்து இழை அமைப்பு, கிடைக்கப்பெற்ற உயிர் வேதியியல், இயற்பியல், வேதியியல் தகவல்களைப் பயன்படுத்தி, ராமச்சந்திரன் தோராய மாதிரியை 1954இல் நேச்சர்' இதழில் வெளியிட்டார். கொலாஜனின் ஒருஹைட்ரஜன்பிணைப்பு, இரண்டு ஹைட்ரஜன் பிணைப்பு மாதிரிகள் தொடர்பான புரிதல், அணுக்களுக்கு இடையேயான குறைந்தபட்ச பிணைப்பற்ற தூரத்தைச் சார்ந்து இருந்தது.

ராமச்சந்திரனும் அவரது அப்போதைய மாணவர் சசிசேகரனும் 1950களின் பிற்பகுதியில் அமினோ அமிலங்கள் மற்றும் தொடர்புடைய சேர்மங்களின் படிக அமைப்புகளில் உள்ள பிணைப்பற்ற தொடர்புகள் குறித்து ஒரு முழுமையான ஆய்வை மேற்கொண்டனர். தள பெப்டைட், பாலிபெப்டைட் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மை, சுழற்சிகள், கிளைசின், அமினோ அமிலங்கள், பிணைப்புக் கோணங்கள், டைபெப்டைடுக்கான இடஞ்சார்ந்த சாத்தியமான மதிப்புகளை வரையறுத்தனர். அது ராமச்சந்திரன் வரைபடத்துக்கு வழிவகுத்தது.

இந்த ஆய்வில் மிகப்பெரிய கணக்கீடுகள் அடங்கியிருந்தன. மேலும் , கார்போஹைட்ரேட்டுகள், நியூக்ளிக் அமிலங்கள், பாலிசாக்கரைடுகள், சர்க்கரைகள் மீதான பகுப்பாய்வு, லைசோசைம், வடிவமைப்பு, படிகவியலின் பல்வேறு அம்சங்கள், இயல்புமீறிய சிதறல் குறித்த ஆய்வுகளையும் தொடங்கினார். கட்டக் கோணங்களை கணக்கிடுவதற்கான சரியான சூத்திரத்தை உருவாக்கினார்.

ராமச்சந்திரனின் பங்களிப்புகள் படிகவியலில் ஃபோரியர் உருமாற்றங்கள், பட மறுசீரமைப்புக்காக சுருள்கள்களை உள்ளடக்கிய ஒரு புதிய முறையை உருவாக்கினார். இந்த முறை கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி ஸ்கேனில், விரிவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அரசின் இயற்பியல் அறிவியலுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு, உயிர் இயற்பியலுக்கான வாதுமல் நினைவுப் பரிசு, அமெரிக்க தோல் வேதியியலாளர்கள் சங்கத்தின் ஜான் ஆர்தர் வில்சன் விருது, ஆசிய சங்கத்தின் மேக்நாத் சஹா பதக்கம், இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் சீனிவாச ராமானுஜன் பதக்கம், பல்கலைக்கழக மானியக் குழுவின் ஜகதீஷ் சந்திர போஸ் விருது, போஸ் நிறுவனத்தின் ஜே. சி. போஸ் பதக்கம், தேசிய சுகாதார நிறுவனங்களின்

ஃபோகார்டி சர்வதேசப் பதக்கம், இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் சர் சி. வி. ராமன் பதக்கம், மருத்துவ அறிவியலுக்கான ராமேஷ்வர்தாஸ்ஜி பிர்லா விருது, பன்னாட்டுப் படிகவியல் ஒன்றியத்தின் ஈவால்ட் பரிசு போன்ற பரிசுகள் இவருக்குக் கிடைத்த பாராட்டுகளில் குறிப்பிடத்தக்கவை.

நோபல் பரிசுக்கான விஞ்ஞானிகளின் விண்ணப்பப் பட்டியலில் இவரது பெயரும் இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.