FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

மனவலிமைக்கு சிலம்பம்!

உடல், மன பலவீனத்தை விலக்கி, வலிமையை வளர்ப்பதே வெற்றிக்கான திறவுகோல்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 7:51 pm IST
பகிர்:

மு.வெங்கடேசன்

உடல், மன பலவீனத்தை விலக்கி, வலிமையை வளர்ப்பதே வெற்றிக்கான திறவுகோல்' என்கிறார் சுவாமி விவேகானந்தர். அதற்கு நம் பாரம்பரிய விளையாட்டுகள் மிகவும் உதவி புரியும்.

இன்று குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதும், கொஞ்சம் வளர்ந்ததும் தவறான பழக்கத்துக்கு அடிமையாவதும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, நகர்ப் புறங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழ்நிலையில், அவர்கள் தங்கள் குழந்தையைக் கண்காணிக்கத் தவறிவிடுகிறார்கள்.

Advertisement

Advertisement

இது பின்னர் குடும்பப் பிரச்னையிலிருந்து சமுதாயப் பிரச்னையாக மாறிவிடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகள் உருவாவதைத் தடுக்கவேண்டும் என்றால், குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே நம் பாரம்பரிய விளையாட்டுகளைப் பழக்கப்படுத்த வேண்டும். உடலையும் உள்ளத்தையும் பேணிக்காப்பதன் அவசியத்தை எடுத்துச் சொல்லவேண்டும்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் சிலம்பத்துக்கு முக்கிய இடம் உண்டு. அது வெறும் கம்புச் சண்டை அல்ல; தற்காப்புக் கலை. உடற்பயிற்சி, மனப்பயிற்சி உள்ளிட்ட நற்குணங்களைக் கொண்ட வீரவிளையாட்டு.

முக்கியத்துவம் பெற்று வரும் சிலம்பப் பயிற்சி, இன்று பல இடங்களில் இலவசமாக அளிக்கப்படுகிறது. அதில் முன்னணியில் செயல்பட்டுவரும் அமைப்புகளில் ஒன்று, சென்னையில் உள்ள சீறும் சிலம்பம் பாரம்பரிய மற்றும் விளையாட்டுக் கழகம்'. அதன் மூலம் சிறுவர் சிறுமியருக்கு முற்றிலும் இலவசமாக சிலம்பம் கற்றுத் தரப்படுகிறது.

அதன் நிறுவனர்கள் ஆசான் ஆர்.சந்திர வர்மா, ஆசான் எஸ்.உதயகுமார். இருவரும் பால்யகால நண்பர்கள். குறும்படத்தை இயக்கியுள்ள சந்திர வர்மா, திரைப்படத்தையும் விரைவில் இயக்கவுள்ளார். உதயகுமார் கலை இயக்குநராகப் பணியாற்ற இருக்கிறார்.

ஆசான் சந்திர வர்மா கூறுகிறார்:

தமிழ் மீதும், தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் மீதும் அதிக பற்று கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் நான். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை பெரம்பூரில்தான். அங்குள்ள டி.ஆர். பி.சி.சி.சி. பள்ளியில் தான் படித்தேன். பல்லாவரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமா முடித்தேன்.

எனக்கு ஐந்து வயதுதான் இருக்கும். எங்கள் பகுதி சிறுவர்கள் பொழுதுபோக்குக்காக கோலி, பம்பரம், கில்லி, கிரிக்கெட், கால்பந்து எனப் பல விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்த காலகட்டம்.

பெற்றோர்களின் விருப்பப்படி, நானும் உதயகுமாரும் ஆர்.எஸ். ஏ. மூர்த்தி என்பவரிடம் சிலம்பம் கற்க ஆரம்பித்தோம். அவரை நாங்கள் மகா குரு என்போம். சிலம்பம் மட்டுமல்லாது பல நற்பண்புகளையும் எங்களிடம் விதைத்தவர். படிக்கும் காலத்திலேயே தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் கலந்துகொண்டு நாங்கள் இருவரும் பாராட்டுகளையும் பல பரிசுகளையும் பெற்றுள்ளோம்.

படிப்பை முடித்ததும், நாங்கள் கற்றுக்கொண்ட சிலம்பத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க விரும்பினோம். சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு ஒரு காரணம்.

இலவசப் பயிற்சி:

மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கு பெற்று பல சாதனைகள் படைக்க வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்துடனும் நண்பர் உதயகுமாருடன் இணைந்து சென்னையில் ஐ.சி.எப்., பெரியார் நகர், எருக்கஞ்சேரி, மாதவரம், மாத்தூர் பகுதிகளிலும், கேரளாவில் கோழிக்கோட்டில் ஓர் இடத்திலும் சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறோம்.

இது முற்றிலும் இலவச சேவை என்பதால், வருமானத்துக்காக பழைய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறோம். அதுதான் எங்கள் வாழ்க்கையின் ஜீவாதாரம்.

மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே சிலம்பக்கலை பயின்றால், அது அவர்கள் உடலையும் உள்ளத்தையும் திடமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, தேவையற்ற சிந்தனைகளுக்கும் இடம்தராது. எவ்வளவுதான் பணிச்சுமை இருந்தாலும், வாரத்தின் ஏழு நாள்களும் குறிப்பிட்ட நேரத்தில் சிறுவர், சிறுமியருக்கு இலவச சிலம்பப் பயிற்சியளிக்கத் தவறுவதில்லை.

25 நாள்கள்... 600 மணி நேரம்: எங்கள் அமைப்பு வெற்றிகரமாக 12 ஆண்டுகள் இலவசமாக சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் பயிற்சி பெற்று, இதுவரை 24 உலகச் சாதனைகள் செய்துள்ளனர்.

குறிப்பாக 25 நாள்கள், 600 மணி நேரம், 8 மாணவர்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இதில் கோமதி என்ற 54 வயதுடைய ஒரு பெண்ணும் இருக்கிறார்.

வேர்ல்டு யூனியன் புக் ஆஃப் ரிக்கார்டு, ஆசிய புக் ஆஃப் ரிக்கார்டு, இந்தியா புக் ஆஃப் ரிக்கார்டு ஆகிய உலகச் சாதனை புத்தகங்கள் இவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன.

இந்த மாபெரும் உலகச் சாதனை படைத்த எட்டுப்பேரையும் அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகைக்கு அழைத்து விருது வழங்கி கௌரவித்தார்.

ஒலிம்பிக்கில் சேர்க்கவேண்டும்: சில தனியார் பள்ளிகளில் சிலம்பம் கற்றுத் தரப்படுகிறது. நாங்களும் சில பள்ளிகளுக்குச் சென்று பயிற்சி அளித்து வருகிறோம். ஒரு சில அரசுப் பள்ளிகளில் தனிப்பட்டவர்களின் விருப்பப்படியே சிலம்ப வகுப்புகள் நடைபெறுகின்றன.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் உடற்கல்வி பாட வேளையில் நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டும் என்பதும், அதை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கை என்றார் ஆசான் சந்திர வர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments