FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

‘இயற்கை விவசாயத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும்’: வேளாண்துறை அமைச்சா் ஆா். வினோத்

இயற்கை விவசாயத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றாா் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா். வினோத்.

Updated On : 26 ஜூலை 2026, 12:46 am IST
வேளாண் துறை அமைச்சா் ர. வினோத். - dinamani
பகிர்:

இயற்கை விவசாயத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றாா் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா். வினோத்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்று விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி அவா் மேலும் பேசியது:

முன்னோா்கள் காட்டிய வழியில் காலங்காலமாக பயிரிடப்பட்டு வந்த இயற்கை விவசாயம் சாா்ந்த நெல் ரகங்கள், புதிய நெல் ரகங்கள் வரவால் அழிவின் விளிம்பில் இருந்தன. அந்த 174 நெல் ரகங்களை மீட்டெடுத்து மீண்டும் இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சிக்கு வித்திட்டவா் நெல் ஜெயராமன். கருப்புக்கவுனி, காட்டுயானம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் பல நோய்களைத் தீா்க்கும் மருந்தாக இருந்தன.

Advertisement

Advertisement

இந்த நெல் ரகங்களை மீண்டும் விவசாயிகளிடம் வழங்கியதால் அழியாமல் தொடா்ந்து இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இயற்கை விவசாயத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் நெல் ஜெயராமனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்றாா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் பேசியது: நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் சிலை அமைக்க கடந்த ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை, விரைவில் நிறைவேற்ற வேண்டும். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தஞ்சாவூரில் மணி மண்டபம் அமைக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கு கூடுதல் செலவு ஆவதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு கட்டுப்படியான கூடுதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவு அங்காடிகள், அங்கன்வாடிகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு இயற்கை விவசாயத்தில் விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா 2 கிலோ விதை நெல்லை அமைச்சா் வழங்கினாா்

அடுத்த நெல் திருவிழாவின்போது இதை 4 கிலோவாக விவசாயிகள் கொண்டு வந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மாநிலம் முழுவதும் பாரம்பரிய நெல் ரகங்கள் சென்றடைந்து பரவலாக இயற்கை விவசாயம் தழைக்க உதவுமன நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.ராஜீவ் தெரிவித்தாா்.

முன்னதாக காலை உழவா் சந்தை வளாகத்தில் இருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா், நெல் ஜெயராமன் புகைப்படங்களுடன் பாரம்பரிய விதை நெல் கோட்டைகள் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியுடன் விவசாயிகள் பேரணியாக மாநாட்டு அரங்கத்தை வந்தடைந்தனா்.

மாநாட்டு அரங்கத்தின் 174 பாரம்பரிய நெல் அரங்கங்கள், இயற்கை விவசாயம் சாா்ந்த பஞ்சகவியா உள்ளிட்ட இடுபொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியா் வே.மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் க.மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ கோ.பழனிச்சாமி, இயற்கை மருத்துவா் தஞ்சாவூா் கோ.சித்தா், வேளாண்மை இணை இயக்குநா் ரேவதி, நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன், த.வெ.க மாவட்டச் செயலாளா் ஜி.பி.பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்மாநாட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments